இணைய சமநிலை குறித்து திறந்தவெளி கூட்டம் நடத்தி கருத்து கேட்கிறது டிராய்

தினகரன்  தினகரன்
இணைய சமநிலை குறித்து திறந்தவெளி கூட்டம் நடத்தி கருத்து கேட்கிறது டிராய்

00:58:05Wednesday2016-01-20

புதுடெல்லி: டெல்லியில் நாளை  திறந்த வெளி கூட்டம் நடத்தி இணைய சமநிலை குறித்து கருத்துக்கேட்க உள்ளதாக டிராய் அறிவித்துள்ளது.  சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமூக வலைதளங்களை பார்ப்பதற்கு வழக்கமான இணையதள பேக்கேஜ் அல்லாமல் தனியாக கட்டணம் வசூலிக்கின்றன. சில நிறுவனங்கள் வாட்ஸ் அப், பேஸ்புக் பயன்படுத்துவதை இலவச சேவையாக அளிக்கின்றன.

இவை இணைய சமநிலைக்கு எதிரானது என எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கருத்துக்களை கேட்டிருந்தது. குறிப்பிட்ட சில இணைய சேவைகளுக்கு தனி கட்டணம் வசூலிப்பது அல்லது அதிக கட்டணம் வசூலிப்பதும் இணைய சமநிலைக்கு எதிரானது.

இந்த கட்டண வேறுபாடு குறித்து ஆராய வரும் 21ம் தேதி திறந்தவெளி ஆலோசனை கூட்டம் நடத்த டிராய் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து டிராய் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘இணைய சேவைக்கு வேறுபட்ட கட்டணம் வசூலிக்கப்படுவது பற்றி ஆராய திறந்த வெளி ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பிஎச்டி ஹவுசில் நடக்கிறது.

இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்புவோர் யாரும் கூட்டத்தில் பங்கேற்கலாம். நிறுவனங்கள் தரப்பிலும் பங்கேற்கலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இணைய சமநிலை குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என டிராய் கூறியிருந்தது. இந்த சூழ்நிலையில் திறந்த வெளி கூட்டம் நடத்தி கருத்துக்கேட்பதால் சில வாரங்களில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை