மெல்போர்ன் ஆடுகளம் திருப்தியற்றது: ஐ.சி.சி. நடவடிக்கை

  தினத்தந்தி
மெல்போர்ன் ஆடுகளம் திருப்தியற்றது: ஐ.சி.சி. நடவடிக்கை

மெல்போர்ன்,ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது ஆஷஸ் டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்றது . இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இதையடுத்து 42 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. இதனால், ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. இரண்டே நாளில் போட்டி முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் வெறும் 2 நாளில் முடிந்தது ரசிகர்களை மட்டுமின்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இன்னொரு பக்கம் மெல்போர்ன் ஆடுகளம் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு உகந்த ஆடுகளம் அல்ல என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சாடினார்.பொதுவாக ஒரு டெஸ்ட் போட்டி முடிந்ததும் அந்த ஆடுகளத்தன்மையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் மதிப்பிடுவது உண்டு. இதன்படி மெல்போர்ன் ஆடுகளத்தை தரமற்றது என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.ஐ.சி.சி. போட்டி நடுவர் ஜெப் குரோவ் கூறுகையில், ‘மெல்போர்ன் எம்.சி.ஜி. ஆடுகளம் அளவுக்கு அதிவேகமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. முதல் நாளில் 20 விக்கெட்டுகளும், 2-வது நாளில் 16 விக்கெட்டுகளும் சரிந்தன. ஒரு பேட்ஸ்மேன் கூட அரைசதம் அடிக்கவில்லை. ஐ.சி.சி.யின் மைதான பிட்ச் மற்றும் அவுட்பீல்டு கண்காணிப்பு வழிகாட்டுதலின்படி இது ஒரு திருப்தியற்ற ஆடுகளம். அதனால் இந்த மைதானத்திற்கு ஒரு தகுதி இழப்பு விதிக்கப்படுகிறது’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை