இந்திய அளவில் முதல்.. சர்வதேச அளவில் 2-வது வீராங்கனை.. மாபெரும் சாதனை படைத்த மந்தனா

  தினத்தந்தி
இந்திய அளவில் முதல்.. சர்வதேச அளவில் 2வது வீராங்கனை.. மாபெரும் சாதனை படைத்த மந்தனா

விசாகப்பட்டினம், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 121 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக விஷ்மி குணரத்னே 39 ரன்கள் அடித்தார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 14.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை ருசித்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 69 ரன்களுடனும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜெமிமா ஆட்டநாயகி விருதை பெற்றார். இந்த போட்டியில் ஸ்மிர்தி மந்தனா 25 ரன்கள் அடித்த நிலையில் கேட்ச் ஆனார். முன்னதாக அவர் 18 ரன்கள் அடித்தபோது, சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை (154 ஆட்டம்) கடந்தார்.இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற மாபெரும் சாதனையை மந்தனா படைத்துள்ளார். சர்வதேச அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 2-வது வீராங்கனை என்ற சாதனையையும் மந்தனா படைத்துள்ளார். நியூசிலாந்தின் சுசிபேட்சுக்கு 4,716 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

மூலக்கதை