பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் இன்று பதவியேற்பு

  தினத்தந்தி
பீகார் முதல்மந்திரியாக நிதிஷ்குமார் இன்று பதவியேற்பு

பாட்னா, 243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டசபையில் 202 இடங்களைப்பெற்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதில் முக்கியமாக, பா.ஜனதா 89, ஐக்கிய ஜனதாதளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அரசு பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடந்தது. இதில் 22 எம்.எல்.சி.க்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சட்டசபை கட்சித்தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை விஜய் சவுத்ரி மற்றும் உமேஷ் குஷ்வாகா ஆகியோர் முன் மொழிந்தனர். பிஜேந்திர யாதவ் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். பின்னர் பேசிய நிதிஷ்குமார், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைக்குமாறு எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.சி.க்களை கேட்டுக்கொண்டார். ஐக்கிய ஜனதாதளத்தின் சட்டசபைக்குழு தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபைக்குழு தலைவராக (முதல்-மந்திரி) நிதிஷ் குமார் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது. மாநிலத்தின் முதல்-மந்திரியாக 10-வது முறையாக நிதிஷ் குமார் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்கிறார். தலைநகர் பாட்னாவில் நடைபெறும் விழாவில் கவர்னர் ஆரிப் முகமது கான், நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதற்கிடையே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் கூட்டமும் நேற்று நடந்தது.இதில் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக விஜய் குமார் சின்கா தேர்வானார்.பா.ஜனதா சட்டசபைக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலுக்கான மேலிட பார்வையாளராக உத்தரபிரதேச துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா நியமிக்கப்பட்டு இருந்தார்.மேலும் மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், முன்னாள் மத்திய மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் இணை பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத்தும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். பா.ஜனதா சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாம்ராட் சவுத்ரி, முந்தைய ஆட்சியில் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை