ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த சுப்ரீம்கோர்ட்டு

  தினத்தந்தி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த சுப்ரீம்கோர்ட்டு

புதுடெல்லி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் பல கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதால் வழக்கை சி.பி.ஐ. (மத்திய புலனாய்வு அமைப்பு) விசாரணைக்கு மாற்றக்கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இம்மானுவேல் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்ததார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி.அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, இரண்டு பேருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், முழு விசாரணை நடத்தி 7,400 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது சரியானது அல்ல என்று தமிழ்நாடு அரசு தனது வாதத்தை முன்வைத்தது. இதனை கேட்ட நீதிபதிகள், அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் மாற்ற வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக எதிர்மனுதாரர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மூலக்கதை