“பீகார் தேர்தலில் நான் போட்டியிடாதது தவறு..” - பிரசாந்த் கிஷோர்

  தினத்தந்தி
“பீகார் தேர்தலில் நான் போட்டியிடாதது தவறு..”  பிரசாந்த் கிஷோர்

பாட்னா, தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதில் 'கிங் மேக்கர்' என்று அழைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. என்று பல கட்சிகளின் தேர்தல் வெற்றிகளுக்கு வியூகம் வகுத்து கொடுத்திருக்கிறார். இவரது வியூகத்தின் மூலம் பெரும்பாலான கட்சிகள் தேர்தலில் வெற்றிக்கனியை பறித்துள்ளன. கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று முதல்-மந்திரியாக வியூகம் அமைத்து கொடுத்தவர் இவரே. இந்த சூழலில் ஜன சுராஜ் என்ற பெயரில் கட்சி தொடங்கியிருந்த பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், முதல் முறையாக பீகார் தேர்தலில் பங்கேற்றார். 200-க்கு மேற்பட்ட தொகுதிகளில் ஜன சுராஜ் கட்சி போட்டியிட்டாலும், அதன் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் களமிறங்கவில்லை. இந்த தேர்தலில் ஜன சுராஜ் கட்சி படுதோல்வி அடைந்தது. கட்சி வேட்பாளர்கள் யாரும் தேர்தலில் வெற்றிபெறவில்லை. இது குறித்து இன்று பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், ‘தேர்தலில் போட்டியிடவில்லை என்று நான் எடுத்த முடிவு தவறாக இருந்திருக்கலாம். சிறந்த முடிவுக்காக நாங்கள் நிறைய செய்ய வேண்டும். எனது கட்சி 4 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பெறும் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. பீகாரில் வெற்றி பெறாமல் நான் பின்வாங்க மாட்டேன். அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று எனக்குத் தெரியவில்லை’ என்று அவர் கூறினார்.

மூலக்கதை