ஆற்றில் குளிக்க சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

  தினத்தந்தி
ஆற்றில் குளிக்க சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அருகே உள்ள கோட்டவிளையைச் சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி செல்லம்மை (வயது65). இவர் சம்பவத்தன்று மதியம் கோட்டவிளை கல்லுப்பாலம் அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு குளிப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் செல்லம்மை கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற வாலிபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலையில் மயிலாடி அருகே கூண்டு பாலம் பகுதியில் அஞ்சுகிராமம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். தொடர்ந்து அவரை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் குளச்சல் களிமார் பகுதியைச் சேர்ந்த அனீஸ் (23) என்பதும் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. மேலும் அவர் செல்லம்மையிடம் இருந்து 1½ பவுன் நகையை பறித்துச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அனீஸை போலீசார் கைது செய்து, அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1½ பவுன் நகையும் மீட்டனர். இந்த நகை பறிப்பில் தொடர்புடைய மற்றொரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மூலக்கதை