தொடர் விடுமுறை.. சுற்றுலா பயணிகளின் படையெடுப்பால் திக்குமுக்காடிய கொடைக்கானல்

கொடைக்கானல், ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா வருகின்றனர். இந்தநிலையில் காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை என தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதிகாலை முதலே கார், வேன், பஸ் என ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். இதனால் ‘மலைகளின் இளவரசி’ திக்குமுக்காடியது. எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே இருந்தது. குறிப்பாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். வனப்பகுதியில் உள்ள கோக்கர்ஸ்வாக், மோயர் பாயிண்ட், பில்லர்ராக், குணாகுகை, பைன்மரக்காடு உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு நிலவிய இயற்கை சூழலை அனுபவித்து மகிழ்ந்தனர். மேலும் தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதேபோல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவிலும் கூட்டம் அலைமோதியது. இதுதவிர நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். மேலும், அப்சர் வேட்டரி சாலை மற்றும் வனப்பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தொடர் விடுமுறை காரணமாக அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் சுற்றுலா தொழிலை நம்பி உள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மூலக்கதை
