‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் - அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்’ நேற்று நடைபெற்றது. இந்த முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆகியோர் ஆய்வுசெய்தனர். இதைத்தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து பெட்டகங்களையும், முதியோர்களுக்கு மருந்து பெட்டகங்களையும் அமைச்சர்கள் வழங்கினார்கள். இந்த ஆய்வில் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ் உள்பட ஏராளமானோர் உடனிருந்தனர். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டு முடிவுகள் அன்று மாலையே பயனாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்ட முகாம்கள் மூலம் 4 லட்சத்து 63 ஆயிரத்து 781 பேர் இதுவரை பயனடைந்துள்ளனர்’ எனக் கூறினார். காஞ்சீபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை பயன்படுத்திய வடமாநிலத்தை சேர்ந்த குழந்தைகள் பலியானது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கூறும்போது, ‘இதுகுறித்து மருந்து கட்டுப்பாடு அலுவலர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்த பின்னர் இதுகுறித்த விரிவான தகவல் தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டில் அந்த வகை இருமல் மருந்துக்கள் விற்பனையாகி வருகிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். மருந்துகளின் காலாவதி தேதி மற்றும் உற்பத்தி விவரங்கள் சேகரிக்க உத்தரவிட்டுள்ளோம். எத்தனை நாட்கள் மருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது? இதுவரை எங்கேயாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? வடமாநிலத்தில் பயன்படுத்தி இருப்பதாக இருந்தால் அந்த மருந்து காலாவதியானதா போன்ற அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளோம். ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்’ என தெரிவித்தார்.
மூலக்கதை
