பருவதமலையில் ஏறியபோது 70 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பக்தர் பலி

  தினத்தந்தி
பருவதமலையில் ஏறியபோது 70 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பக்தர் பலி

திருவண்ணாமலை,திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே தென்மகாதேவமங்கலம், கடலாடி இடையே பருவதமலை அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,560 அடி உயரம் கொண்ட இந்த மலை மீது, அமைந்துள்ள பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்னேஸ்வரர் சாமி கோவில் பிரசித்தி பெற்றதாகும். மூலிகை, செடி, கொடி மரங்கள் நிறைந்த இந்த சிறப்பு வாய்ந்த தென் கைலாயம் என்று அழைக்கப்படும் பருவதமலைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி, அமாவாசை தினங்களில் மற்றும் வார விடுமுறை நாட்களிலும் வந்து, செங்குத்தான இம்மலை மீது ஏறி சென்று பக்தர்களே மலை மீது உள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர். ஆயுத பூஜை தொடர் விடுமுறையில் திரளான பக்தர்கள் இங்கு மலை மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி கிராமம் செல்லப்ப நகரை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 46), டிராக்டர் மெக்கானிக். இவர் அவரது நண்பர்களுடன் பருவதமலையில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். நேற்று அவர்கள் பருவதமலை மீது ஏறி சென்று கொண்டிருந்தனர். மலை ஏறும்போது ஒரு இடத்தில் ஏணிப்படி உள்ளது. அதன் வழியாக பக்தர்கள் ஏறிச்ெசல்கிறார்கள். இந்த நிலையில் ஏணிப்படியில் ஏறும்போது திடீரென நிலை தடுமாறிய பழனிவேல் சுமார் 70 அடி உயரத்தில் இருந்து பாறையின் மீது விழுந்தார். இதில் படுகாயம் ஏற்பட்டு மயங்கினார். உடன் சென்ற நண்பர்களும் மலை மீது ஏறிக்கொண்டிருந்த பக்தர்களும் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இதுபற்றி கடலாடி போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் பழனிவேலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் பழனிவேலை டோலி கட்டி கீழே மலை அடிவாரத்திற்கு எடுத்து வந்தனர். அங்கு தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் கடலாடி போலீசார் இறந்த பழனிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை