நாமக்கல் தவெக மாவட்ட செயலாளரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

நாமக்கல்,தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 27-ந் தேதி நாமக்கல்லில் பிரசாரம் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையின் பெயர் பலகை மீது கட்சியினர் ஏறி நின்றதால், அது இடிந்து விழுந்தது. இதில் கண்ணாடி சுவர், கண்காணிப்பு கேமரா போன்றவை சேதம் அடைந்தன. இது குறித்து மருத்துவமனையின் மேலாளர் அரிச்சந்திரன் (வயது45) நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், தவெக மாவட்ட செயலாளருமான சதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சதீசை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இதை அறிந்த அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த ஐகோர்ட்டு, மனுவை தள்ளுபடி செய்தது. இதற்கிடையே தலைமறைவான சதீசை பிடிக்க நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
மூலக்கதை
