கரூர் சம்பவம்: உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும் - தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய தலைவர்

  தினத்தந்தி
கரூர் சம்பவம்: உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும்  தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய தலைவர்

கரூர், கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந்தேதி நடந்த த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் கரூருக்கு வருகை தந்தனர். பின்னர் நேற்று காலை அந்த குழுவினர், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு சம்பவம் நடைபெற்ற பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது இச்சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். பின்னர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரிடம் உடல்நலம் பற்றி விசாரித்து, அவரிடம் சம்பவம் எவ்வாறு நடந்தது என கேட்டனர். அதன்பின் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்த கிராமமான ஏமூர்புதூருக்கு சென்ற கிஷோர் மக்வானா தலைமையிலான குழுவினர், அங்கு உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா நிருபர்களிடம் கூறியதாவது:- “கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினேன். தொடர்ந்து மத்திய அரசு சார்பில் நிதி உதவிகளை விரைந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த அனைத்து அறிக்கைகளையும் ஆணையத்திற்கு அனுப்புமாறு அரசிடம் கேட்டுள்ளோம்.” இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், மத்திய மண்டல ஐ.ஜி.ஜோஷி நிர்மல் குமார், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஷ் தங்கையா உள்பட பலர் உடனிருந்தனர்.

மூலக்கதை