ஓசூரில் கனமழை: அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து

கிருஷ்ணகிரி , கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய பெய்து, நேற்று காலை வரை நீடித்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. குறிப்பாக ஓசூர் பஸ் நிலையம், பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு ராயக்கோட்டை ரோடு சர்க்கிள், ஜி.ஆர்.டி. சர்க்கிள், பாகலூர் ரோடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. சூளகிரி அருகே கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றதை பார்க்க முடிந்தது. விடிய, விடிய பெய்த மழையால் மாவட்டத்திலேயே ஓசூரில் தான் 12 செ.மீட்டர் மழை பதிவானது. இந்தநிலையில் கனமழையால் ஓசூர் பார்வதி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த அரசு கல்லூரி மாணவர் சுரேஷ் (வயது 19) என்பவர் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் ஓசூர் அருகே குமுதேப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. கனமழை பெய்ததை தொடர்ந்து ஓசூர் தர்கா ஏரி, சூட சந்திரம் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி தண்ணீர் வெளியேறியது. நகரின் மையப்பகுதியில் உள்ள ராமராயக்கன் ஏரி நிரம்பும் நிலையில் உள்ளது. ஓசூர் அருகே உள்ள திப்பாளம் மெயின் ரோட்டில் இருந்து திப்பாளம் கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளநீரில் மூழ்கியது. தரைப்பாலத்தில் வெள்ள நீர் பாய்ந்தோடுவதால் திப்பாளம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் சிலர் தரைப்பாலத்தில் செல்லும் மழைநீரையும் பொருட்படுத்தாமலும், ஆபத்தை உணராமலும் கடந்து சென்றனர். இதையடுத்து ஓசூர் அட்கோ போலீசார் பொதுமக்கள் யாரும் அப்பகுதியை கடந்து செல்லாத வண்ணம் தடுப்பு கம்பிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தொடர் கனமழையால் ஓசூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த மருத்துவமனையில் ஒருபகுதி சுவர் ஏற்கனவே கடந்த ஆண்டு சாலைப்பணியின்போது இடிந்து விழுந்தது. இந்த நிலையில், 2 நாட்களாக கிருஷ்ணகிரியின் ஓசூர் பகுதியில் மழை கொட்டி தீர்த்ததால் சுற்றுச்சுவரின் மீதி எஞ்சிய பகுதியும் இடிந்து விழுந்தது. சுவர் இடிந்து விழுந்ததில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூலக்கதை
