‘கேட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

சென்னை, நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி. உள்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளில் சேர ‘கேட்' எனும் தேசிய நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் இந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்கின்றன. மேலும், கணிசமான தனியார் உயர்கல்வி நிறுவனங்களும் ‘கேட்' மதிப்பெண் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. இந்த நுழைவுத்தேர்வு எந்திரவியல், கட்டிடவியல் உள்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுக்கு இந்த மதிப்பெண் செல்லும். அதன்படி 2026-ம் ஆண்டுக்கான ‘கேட்' தேர்வு வரும் பிப்ரவரி 7, 8 மற்றும் 14, 15-ந்தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக காலை, மதியம் என இருவேளைகளிலும் நடைபெற உள்ளது. இந்த முறை ‘கேட்' தேர்வை கவுகாத்தி ஐ.ஐ.டி. நடத்த உள்ளது. மேலும், தேர்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாக பிரித்து அமைக்கப்பட இருக்கின்றன. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஆகஸ்டு 28-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 28-ந்தேதியுடன் முடிவடைந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் காலஅவகாசம் வருகிற 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து விருப்பம் உள்ளவர்கள் https://gate2026.iitg.ac.in/எனும் இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை தவறவிடுபவர்கள் தாமதக்கட்டணத்தை செலுத்தி வருகிற 9-ந்தேதி வரையும் விண்ணப்பிக்கலாம்.
மூலக்கதை
