தமிழகத்தில் 10 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சென்னை,சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதலின்படி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். சென்னை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்திந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழகம், கிறிஸ்துவ ஜனநாயக முன்னணி, ஜெபமணி ஜனதா, காமராஜர் தேசிய காங்கிரஸ், மக்கள் சக்தி கட்சி, என் இந்தியா கட்சி, புதிய தமிழகம், இந்திய குடியரசு கட்சி (சிவராஜ்), தமிழக முன்னேற்ற காங்கிரஸ், வளமான தமிழக கட்சி ஆகிய 10 அரசியல் கட்சிகள் 2021-ம் ஆண்டு முதல் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்கவில்லை. எனவே, அந்த கட்சிகளை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. எனினும், நடவடிக்கைக்கு முன்பாக 10 கட்சிகளுக்கு தங்கள் கருத்தினை தெரிவிக்க ஒரு வாய்ப்பு அளிக்கும் விதமாக தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் மூலமாக நேரடி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட கட்சிகள் அனைத்தும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள நாளில் எழுத்துப்பூர்வமான அறிக்கை மற்றும் உரிய ஆவணங்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் முன்பு ஆஜராக வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் கட்சிகளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லையெனில், கட்சிகளுக்கு பதிவு செய்வதற்கு எந்த கருத்துகளும் இல்லை என கருதப்பட்டு இறுதி முடிவினை இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலக்கதை
