கரூர் துயர சம்பவம்: தவெக கரூர் தெற்கு நகரப் பொருளாளர் கைது

கரூர், கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த விஜய் பிரசாரத்தின்போது கூட்டநெரிசலால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் அப்பாவி பொதுமக்கள் 41 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் மட்டுமின்றி அகில இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்திற்கு காரணம் என்ன? என்பது பற்றி ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மற்றும் சிலர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் மீது 5 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் தாக்கல்செய்யப்பட்டு உள்ளது. அதில் அரசியல் பலத்தை காட்டுவதற்காக விஜய் 4 மணிநேரம் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என்றும் மக்களின் உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டதன் விளைவாக, மேற்படி சம்பவத்தில் அதிக அளவில் மிதிபடுதல் ஏற்பட்டு அதனால் 11 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் புஸ்சி ஆனந்த், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட த.வெ.க. நிர்வாகிகளை கைது செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தனிப்படை போலீசார், அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதில் மதியழகன் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படையினர் அங்கு சென்று, மதியழகனை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் தவெக கரூர் நகர பொருளாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். பவுன்ராஜை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலக்கதை
