விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி, கரூரில் சுவரொட்டி

கரூர்,கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 59 பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மேலும் ஒருவர் மரணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி கரூர் மற்றும் திருச்சியில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு மாணவர் சங்கம் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டி நகர் முழுவதும் பல இடங்களிலும் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சுவரொட்டியில், தவெக தலைவர் விஜய் கைகளை உயர தூக்கியுள்ள நிலையில், அவரது கைகளில் இருந்து ரத்தம் வடிவது போல சித்தரித்து, ‘தமிழக அரசே அப்பாவி உயிர்களை பலி வாங்கி தப்பி ஓடிய விஜய் என்கிற அரசியல் தற்குறியை கொலைக் குற்றவாளி என கைது செய் - தமிழ்நாடு மாணவர் சங்கம்' என்று அச்சிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மூலக்கதை
