கரூர் கூட்ட நெரிசல்: தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கைது செய்யப்படுகிறாரா?

  தினத்தந்தி
கரூர் கூட்ட நெரிசல்: தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கைது செய்யப்படுகிறாரா?

கரூர்,கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது, கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த துயரத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், கட்சி நிர்வாகி சி.டி.நிர்மல்குமார் மற்றும் பலர் மீது பி.என்.எஸ். பிரிவு 105 (கொலைக்கு சமம் இல்லாத படுகொலை செய்தல்), பி.என்.எஸ்.பிரிவு 110 (குற்றவியல் கொலை செய்ய முயற்சித்தல்), பி.என்.எஸ்.பிரிவு 125 (மற்றவர்களின் உயிர் அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்தல்), பி.என்.எஸ். பிரிவு 223 (அரசு ஊழியரால் முறையாக பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாமை) மற்றும் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், கரூர் நெரிசல் தொடர்பாக வழக்குப்பதிவான நிலையில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு வராவிட்டால் 3 பேரையும் கைது செய்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு தவெகவினர் இது தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதை கண்டுகொள்ளாமல் இருந்ததாகவு, கலவரத்தில் ஈடுபடுதல், பொது, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை