புரட்டாசியில் புரட்டி எடுக்கும் சுழல் காற்று பருவமழையை பாதிக்குமா..? - அச்சத்துடன் விவசாயிகள்

  தினத்தந்தி
புரட்டாசியில் புரட்டி எடுக்கும் சுழல் காற்று பருவமழையை பாதிக்குமா..?  அச்சத்துடன் விவசாயிகள்

சென்னை,பொதுவாக ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் வைகாசி மாதத்திலேயே தொடங்கிய காற்று புரட்டாசி மாதத்திலும் நீடித்து வருகிறது. அண்டை மாநிலங்களில் மட்டுமல்லாமல் பக்கத்து தாலுகாக்களில் கூட மழைப்பொழிவு இருக்கிறது. ஆனால் பல்வேறு பகுதிகளில் மழை மேகம் திரண்டு வந்தாலும் மழையாக மாறாமல் கலைந்து செல்கிறது. இதற்கு புரட்டாசி மாதத்திலும் அதிவேகத்தில் புரட்டி எடுக்கும் காற்று தான் காரணமாகிறது. இதனால் இந்த ஆண்டு பருவமழை ஏமாற்றி விடுமோ என்ற அச்சத்தை இந்த காற்று ஏற்படுத்துகிறது என்று விவசாயிகள் கூறினர். இதுகுறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:- புரட்டாசி மாதத்தில் காற்று வீசுவதென்பது இயல்பான நிகழ்வு தான். இதை பருவமழையின் தொடக்கத்துக்கான நல்ல அறிகுறியாகும். காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் மழை மேகங்கள் கலைந்து விடும். ஆனால் இடைக்கால மழையில் மட்டுமே அவ்வப்போது இந்த பாதிப்பு ஏற்படக்கூடும். அதேநேரத்தில் பருவமழை என்பது கடலில் ஏற்படும் எல்-நினோ, லா-நினோ போன்ற உலகளாவிய வானிலை நிகழ்வுகள், கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழை திருப்திகரமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே பருவமழை குறித்து அச்சம் இல்லாமல் சாகுபடிக்கான முன்னேற்பாடுகள் மற்றும் கனமழையில் பயிர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றில் ஆர்வம் காட்டலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை