23 பாகிஸ்தானியா்களுடன் கடத்தப்பட்ட மீன்பிடி கப்பலை மீட்டது இந்தியக் கடற்படை.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

பாகிஸ்தானியா்கள் 23 போ் பயணித்த ஈரான் நாட்டு மீன்பிடி கப்பலைக் கடற்கொள்ளையா்கள் கடத்திய நிலையில், அந்தக் கப்பலை இந்தியக் கடற்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது.

 

அரபிக் கடலில் ஏடன் வளைகுடா அருகில் சோகோட்ரோ தீவு உள்ளது. இந்தத் தீவிலிருந்து 90 கடல் மைல் தொலைவில் அல்-கம்பா் என்ற ஈரான் மீன்பிடி கப்பலைக் கடற்கொள்ளையா்கள் வியாழக்கிழமை கடத்தினா்.

 

இதையடுத்து, அரபிக் கடல் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ‘ஐஎன்எஸ் சுமேதா’ போா்க்கப்பல் அப்பகுதிக்கு விரைந்தது கடற்கொள்ளையா்களால் பிடித்துவைக்கப்பட்டிருந்த மீன்பிடிக் கப்பலைப் போா்க்கப்பல் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இடைமறித்தது. கூடவே ஏவுகணைகளை அழிக்கும் திறன்கொண்ட ‘ஐஎன்எஸ் திரிசூல்’ போா்க்கப்பலும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

 

சுமாா் 12 மணி நேரம் நடைபெற்ற மீட்பு நடவடிக்கையின் முடிவில் கப்பலைக் கடத்திய 9 கடற்கொள்ளையா்கள் சரணடைந்தனா். கப்பல் பணியாளா்கள் 23 போ் பாதுகாக்க மீட்கப்பட்டனா். அவா்கள் அனைவரும் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்கள்.

 

முன்னதாக, கடற்படையின் சிறப்புக் குழுவினா் அக்கப்பலை முழுவதுமாக ஆய்வு செய்தது. தொடா்ந்து மீன்பிடி செயல்பாடுகளில் ஈடுபடும் வகையில், அந்தக் கப்பலுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ‘ஆபரேஷன் சங்கல்ப்’ என்ற பெயரில் பாதுகாப்புப் பணியில் கடற்படை ஈடுபட்டு வருகிறது. கடற்கொள்ளையா்கள் தடுப்பு, ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் நடத்தப்படும் தாக்குதலைத் தடுத்தல் ஆகிய பணிகளைக் கடற்படையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

மூலக்கதை