சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

இந்தியப் பெருங்கடலில், கடற்கொள்ளையர்களிடமிருந்தும், ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களிலிருந்தும் சரக்குக் கப்பல்களைப் பாதுகாக்கும் பணியில் பத்துக்கும் மேற்பட்ட போர்க் கப்பல்களை இந்தியக் கடற்படை அரபிக் கடலில் ஈடுபடுத்தியுள்ளது.

 

குறிப்பாக, இந்து மகா சமுத்திரத்தின் வடமேற்குப் பகுதி வழியாகப் பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. கடந்த சில மாதங்களா ஏடன் வளைகுடா, செங்கடல் பகுதி கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரை உள்ளிட்ட பகுதிகள், அந்தக் கடல் வழித் தடத்தில் பயணிக்கும் கப்பல்களுக்குப் பாதுகாப்பிற்காக மாறியிருக்கின்றன.

 

ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் செயல்படும் சோமாலியக் கடற்கொள்ளையர்களை எதிர்கொள்வதற்கு இந்தியக் கடற்படை கடந்த சில ஆண்டுகளாகவே செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குப் பிறகு, ஈரானின் பின் துணையுடன் ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாகப் பயணிக்கும் சரக்குக் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கியது முதல் இந்தியக் கடற்படையின் பொறுப்பும், தேவையும் அதிகரித்திருக்கிறது.

 

 இந்தியப் பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்ய 'ஆபரேஷன் சங்கல்ப்' என்கிற பெயரில் கடற்கொள்ளையர்களின் தாக்குதலைத் தடுப்பது, கப்பல்களை மீட்பது, ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்களிலிருந்து சரக்குக் கப்பல்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளை இந்தியக் கடற்படை மேற்கொள்கிறது.

 

22 இந்திய மாலுமிகள் காப்பாற்றப்பட்டனர்.

 

எம்.வி. கெம்புளுட்டோ என்கிற கப்பல் இந்தியக் கடற்கரையிலிருந்து சுமார் 220 கடல் மைல்களுக்கு அப்பால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து 'ஆபரேஷன் சங்கல்ப்' வேகமெடுத்தது. ஹூதி கிளர்ச்சியாளர்களால் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்ட ஆறு சரக்கு கப்பல்களை இந்தியக் கடற்படை இதுவரை பாதுகாப்பாக மீட்டுள்ளது.

 

எம்.வி.மர்லின் லோண்டா என்கிற பிரிட்டிஷ் எண்ணெய்க் கப்பல், ஜனவரி 27-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் தீப்பிடித்தபோது, 'ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்' உடனடியாக விரைந்து ஆறு மணி நேரத்தில் தீயை அணைத்து கப்பலைப் பாதுகாப்பாக மீட்டது. அந்தக் கப்பலில் இருந்த 22 இந்திய மாலுமிகள் காப்பாற்றப்பட்டனர்.

 

அதே காலகட்டத்தில், கடற்கொள்ளையர்களால் குறிவைக்கப்பட்ட ஏழு கப்பல்களையும் இந்தியக் கடற்படை தடுத்து நிறுத்திக் காப்பாற்றியிருக்கிறது.

 

மார்ச் 16-ம் தேதி இந்தியக் கடற்படையின் தொடர் கண்காணிப்பைத் தொடர்ந்து சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த ஆண்டு டிசம்பரில் கடத்திச் செல்லப்பட்ட மால்டா நாட்டின் ரூயன் சரக்குக் கப்பலை இந்தியக் கடற்படை மீட்டிருக்கிறது.

 

இந்த மீட்புப் பணியில் கடல் கமாண்டோக்களும், இந்திய விமானப்படையும் இணைந்து செயல்பட்டன. இந்தியக் கடல் எல்லையிலிருந்து 2,600 கி.மீ. தொலைவில் வடக்கு அரபிக் கடல் பகுதியில் கடற்கொள்ளையர் வசமிருந்த அந்தக் கப்பலை 'ஐஎன்எஸ் கொல்கத்தா' சில மணி நேர நடவடிக்கைக்குப் பிறகு மீட்டது. கடற்கொள்ளையர்கள் சரணடைந்தனர். 17 மாலுமிகள், 37,800 டன் சரக்கும் மீட்கப்பட்டது. பிற கப்பல்களைக் கொள்ளையடிக்க இந்தக் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் பயன்படுத்தி வந்தனர்.

 

அரபிக் கடலில் ஏடன் வளைகுடா அருகிலுள்ள சோகோட்ர வளைகுடா அருகிலுள்ள சோகோட்ரோ தீவிலிருந்து 90 கடல் மைல் தொலைவில் அல்-கம்பர் என்கி ஈரான் மீன்பிடிக் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடந்த வாரம் கடத்தினர். அரபிக் கடல் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 'ஐஎன்எஸ் சுமேதா' என்கிற போர்க்கப்பல் அந்தப் பகுதிக்கு விரைந்தது. கூடவே, 'ஐஎன்எஸ் திரிசூ என்கிற போர்க்கப்பலும் மீட்புப் பணிய ஈடுபடுத்தப்பட்டது. சுமார் 12 மணி நேர மீட்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, கப்பலைக் கடத்திய 9 கடற்கொள்ளையர்கள் சரணடைந்தனர்.

அந்தக் கப்பலில் பணியாற்றிய 23 பாகிஸ்தானிய மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

 

 

கடந்த நாட்களில் சுமார் 20 சம்பவங்களில் 'ஆபரேஷன் சங்கல்ப்' உடனடியாகத் தலையிட்டதால் கப்பல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இந்து மகா சமுத்திரம் வழியாக, அதிலும் குறிப்பாகச் செங்கடல், ஏடன் வளைகுடா வழியாகப் பயணிப்பது ஆபத்தாக இருப்பதால், சரக்குக் கப்பல்களுக்கான காப்பீட்டுக் கட்டணம் 35% முதல் 40% வரை அதிகரித்திருக்கிறது. சரக்குப் பெட்டகங்களின் (கன்டெய்னர்கள்)

 

வாடகையும் 500 டாலரிலிருந்து 2,000 டாலராக அதிகரித்திருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தின், நன்னம்பிக்கை முனையைச் சுற்றிப் பயணிப்பது என்றால், போக்குவரத்து செலவு கணிசமாக அதிகரிக்கும். இந்தியக் கடற்படையின் செயல்பாடுகள் இந்தியாவின் வர்த்தகப் போக்குவரத்துக்கும் அவசியத் தேவை இந்தியாவுக்கான 60% கச்சா எண்ணெய் இறக்குமதியும் அரபிக் கடல் வழியாகத்தான் வர வேண்டும்.

 

இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் ஏறத்தாழ 50% அரபிக் கடல் மூலம்தான் நடக்கிறது. அதனால் பசிபிக் கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது என்பது இந்தியாவின் தேவையும்கூட. நம்மைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் பாதுகாப்பாக இருப்பதற்கு, இந்தியக் கடற்படையின் வலிமையை உறுதிப்படுத்துவது அவசியம்.

 

இன்றைய நிலையில் விமானம், ஏவுகணைகள் தாங்கிய கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போதுமான அளவில் இந்தியக் கடற்படையில் இல்லை என்பதுதான் நிஜம்.

 

கடற்படைக்கான கப்பலானாலும், நீர்மூழ்கிக் கப்பலானாலும் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தாலும்கூட, அவை கிடைப்பதற்குச் சில ஆண்டுகள் ஆகும் என்பதை மறந்துவிடக் கூடாது.

மூலக்கதை