பச்சை நிற உடை உத்தரவை திரும்ப பெற்றது 'சொமேட்டோ'

தினமலர்  தினமலர்
பச்சை நிற உடை உத்தரவை திரும்ப பெற்றது சொமேட்டோ



புதுடில்லி, சைவ உணவுகளை வினியோகிக்கும் ஊழியர்களுக்கு பச்சை நிற சீருடை வழங்கிய பிரபல, 'ஆன்லைன்' உணவு வினியோக நிறுவனமான, 'சொமேட்டோ'வுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அந்த உத்தரவு திரும்ப பெற்றப்பட்டது.

ஆன்லைன் உணவு வினியோக நிறுவனமான, 'சொமேட்டோ'வில் பணியாற்றும் வினியோக பணியாளர்களுக்கு, சிவப்பு நிற சீருடை வழங்கப்பட்டு இருந்தது.

இதில், சைவ உணவுகளை மட்டும் வினியோகம் செய்யும் பணியாளர்களை தனியாக பிரித்து அவர்களுக்கு பச்சை நிறத்தில் புதிய சீருடையை, 'சொமேட்டோ' நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீப்பிந்தர் கோயல் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டிருந்தாவது:

'சொமேட்டோ மொபைல் போன்' செயலியில் பிரத்யேகமாக 'ப்யூர் வெஜ் மோட்' என்ற பிரிவு துவக்கியுள்ளோம்.

இதன் வாயிலாக உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள், வெறும் சைவ உணவகங்களின் பட்டியலும், சைவ உணவு வகைகளையும் எளிதில் கண்டறிந்து தேர்வு செய்ய முடியும்.

அவ்வாறு, ஆர்டர் செய்யும் உணவுகளை வினியோகிக்கும் நபர்கள் பச்சை நிற உடை அணிவர்; அசைவ உணவு வினியோகிக்கும் நபர் வழக்கம்போல் சிவப்பு நிற உடை அணிவர். இந்த அறிவிப்பு, மக்களை மத ரீதியாகவோ, சமுதாய ரீதியாகவோ பிளவுபடுத்தும் நோக்கமல்ல.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. 'சொமேட்டோ' நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, இந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, 'சொமேட்டோ' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீப்பிந்தர் கோயல் தன் சமூக வலைதளத்தில், 'சைவ உணவு பிரியர்களுக்காக துவங்கப்பட்ட ப்யூர் வெஜ் முறை தொடரும்; அதேநேரம் ஊழியர்கள் தங்களது பழைய சிவப்பு நிற உடையிலேயே உணவுகளை தொடர்ந்து வினியோகம் செய்வர்' என பதிவிட்டுள்ளார்.

புதுடில்லி, சைவ உணவுகளை வினியோகிக்கும் ஊழியர்களுக்கு பச்சை நிற சீருடை வழங்கிய பிரபல, 'ஆன்லைன்' உணவு வினியோக நிறுவனமான, 'சொமேட்டோ'வுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு

மூலக்கதை