மாவட்ட நீதிபதி பணி நீக்கம்: குறுக்கிட ஐகோர்ட் மறுப்பு

தினமலர்  தினமலர்
மாவட்ட நீதிபதி பணி நீக்கம்: குறுக்கிட ஐகோர்ட் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்



சென்னை : 'காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர் உடன் தொலைபேசியில் பேசிய விவகாரத்தில், மாவட்ட நீதிபதியை பணி நீக்கம் செய்தது செல்லும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன், படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதியான ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்தது.

அப்போது, ஈரோடு மாவட்டம் பவானியில், மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ராஜசேகரன், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிகாரி, ஜெயேந்திரருக்கு வேண்டியஒருவர் உடன் தொலைபேசியில் பேசியதாக, உயர் நீதிமன்றத்துக்கு புகார் வந்தது.

ஜெயேந்திரருக்கு எதிரான குற்ற வழக்கை முடிக்க பணம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

சஸ்பெண்ட்



இதையடுத்து, விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு விசாரணை நடந்தது. மாவட்ட நீதிபதி ராஜசேகரனுக்கு எதிராக துறை விசாரணையும் நடந்தது. இதற்கிடையில், 2013 மார்ச்சில் நீதிபதி ராஜசேகரன், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

விசாரணையின் முடிவில், மாவட்ட நீதிபதி ராஜசேகரன் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு, 2022 நவம்பரில் பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ராஜசேகரன் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

விசாரணை நடத்திய நீதிபதியின் அறிக்கையே, மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதற்கு போதுமானது.

உயர் நீதிமன்றம் நியமித்த போலீஸ் அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையில், குரல் மாதிரிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், அவற்றை அவர்கள் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

'சிடி'யில் உள்ள குரலும், சம்பந்தப்பட்டவர்களில் அசல் குரலும் ஒத்துப் போகின்றன.

வழக்கு பரிசீலனை



எனவே, குரல் மாதிரிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் ஒப்புக் கொண்டதும், ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நீதிபதியின் முடிவுகளும் இருக்கும் போது, ஒழுங்குமுறை விதிகளின்படி பொது ஊழியரை தண்டிப்பதற்கு அதுவே போதுமானது. இயற்கை நீதி கண்டிப்புடன் பின்பற்றப்பட்டுள்ளது.

துறை நடவடிக்கைக்கான நடைமுறையை பின்பற்றியதில், எந்த தவறும் இல்லை. உயர் நீதிமன்றத்தின் உயர்மட்டக் குழு உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும், மனுதாரரின் வழக்கு பரிசீலிக்கப்பட்டுள்ளது.

பணி நீக்கம் என்ற முடிவை, உயர் நீதிமன்ற நிர்வாக குழு எடுத்து, அதற்கு நீதிபதிகள் குழு ஒப்புதலும் வழங்கி உள்ளது.

நீதிபதிகள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும்.இந்த வழக்கைப் பொறுத்தவரை, மனுதாரருக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகி உள்ளன. எனவே, பணி நீக்க தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதில் குறுக்கிட நாங்கள்விரும்பவில்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை : 'காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர் உடன் தொலைபேசியில் பேசிய விவகாரத்தில், மாவட்ட நீதிபதியை பணி நீக்கம் செய்தது செல்லும்' என, சென்னை உயர்

மூலக்கதை