உயர் நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை அலுவல் மொழியாக்க உச்சநீதிமன்ற அனுமதி தேவையில்லை.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

குடியரசுத் தலைவர் ஒப்புதல் போதுமானது என முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

 

 

மாநில உயர் நீதிமன்றங்களில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை அலுவல் மொழியாக்குவதற்கு உச்சநீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை; குடியரசுத் தலைவர் ஒப்புதல் போதுமானது என முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தில்லியில் வழக்குரைஞர்கள் குழு நடத்திய நிகழ்வில் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

 

மாநிலங்களில் உள்ள அலுவல் மொழிகளை அந்தந்த மாநிலங்களின் உயர் நீதி மன்றங்களில் அலுவல் மொழியாக ஆக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள், அரசமைப்புச் சட்டப் பிரிவுகளில் கூறப்பட்டவை என்ன? என்பது குறித்த கலந்துரையாடலுக்கான தேசியமா நாடு தில்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு பேசினர்.

 

சென்னை உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை அலுவல் மொழியாக ஆக்குவதற்கான முன்மொழிவுகளைத் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள், மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இதை மத்தியச் சட்ட அமைச்சகம் உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது. அப்போது, இந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

 

இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்வில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பகவிநாயகம் கலந்து கொண்டு பேசியதாவது: சென்னை உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை அலுவல் மொழியாக ஆக்குவதற்கு முன்மொழிவுகளையும் தீர்மானங்களையும் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பும் போது, 1965-ஆம் ஆண்டு அமைச்சரவைத் தீர்மானத்தைச் சுட்டிக் காட்டி, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்புகிறது. ஆனால், அரசமைப்புச் சட்டப் பிரிவு 348(2)- இதன்படி உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பத் தேவையில்லை. உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு அல்லது தலைமை நீதிபதி உத்தரவு இதைக் கட்டுப்படுத்தாது.

 

மாநில அரசு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பும்போது அதைக் குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்பலாம். குடியரசுத் தலைவர்தான் உயர் நீதிமன்ற அலுவல் மொழி குறித்து ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்பு உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும் எனக் கூறி அனுப்புகிறது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 348(2)-இல் அப்படிக் குறிப்பிடப்படவில்லை. உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை.

 

மத்திய அரசு அரசமைப்புச் சட்டப் பிரிவு 342-இன்படி பிரிவு 348(2) என்ன கூறப்பட்டுள்ளது என்கிற விளக்கத்தை உச்சநீதிமன்றத்தில் கோரலாம். அதைக் குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு தகவல் கொடுக்க வேண்டும். இதை மத்திய அரசு செய்ய வேண்டும் என்றார் அவர்.

 

தமிழ் நவீன அறிவியல் மொழியாகவும் மாறி வருகிறது

 

இதே கருத்தை உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஆர்.பாலசுப்பிரமணியம், தமிழகம் - புதுச்சேரி பார் கழகம் இணைத் தலைவர் கே.பாலு ஆகியோரும் வலியுறுத்தினர். தமிழக வழக்குரைஞர் பால் கனகராஜ் "இந்த கருத்துக்குப் பொதுமக்கள் ஆதரவு திரட்ட வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

 

நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜா பேசுகையில், "தமிழ் சர்வதேச மொழியாக இருப்பதோடு, நவீன அறிவியல் மொழியாகவும் மாறி வருகிறது. தேசிய மொழி, பிராந்திய மொழி எனப் பாகுபாடு பார்க்கக் கூடாது. முன்பு தமிழக அரசு மெட்ராஸ் "சென்னை' என மாற்றக் கோரியபோது மறைந்த தலைவர் (உள்துறை அமைச்சராக) இந்திரஜித் குப்தா உடனடியாகச் செயல்பட்டார். "தமிழ்நாடு உயர்நீதிமன்றம்' எனப் பெயர் மாற்றம் செய்வதில் என்ன தவறு?' என்றார்.

மூலக்கதை