''அந்தக் காட்சிக்கு 28 டேக்குகள்...இப்போதும் அதை நினைத்தால்''...- வித்யா பாலன்

  தினத்தந்தி
அந்தக் காட்சிக்கு 28 டேக்குகள்...இப்போதும் அதை நினைத்தால்... வித்யா பாலன்

மும்பை,பிரதீப் சர்க்கார் இயக்கிய ''பரினீதா'' (2005) படத்தில் நடித்தபோது தனக்குக் கிடைத்த அனுபவத்தைப் பற்றி வித்யா பாலன் மனம் திறந்து பேசினார். ஒரு காட்சியில் நடிக்க தான் 28 டேக்குகள் எடுத்ததாக கூறினார். வித்யா பாலனின் பாலிவுட் திரையுலக வாழ்க்கை 'பரினீதா' படத்துடன் தொடங்கியது . இந்த படம் ஜூன் 10, 2005 அன்று வெளியிடப்பட்டது. சரத் சந்திர சட்டோபாத்யாய் எழுதிய பெங்காலி நாவலான பரினீதா (1914) ஐ அடிப்படையாகக் கொண்டது இந்த படம். சஞ்சய் தத் மற்றும் சயிப் அலி கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். பிரதீப் சர்க்கார் இயக்கிய இந்த படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 29-ம் தேதி ரீ-ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இது குறித்து நேர்காணல் ஒன்றில் அவர் பேசுகையில், ''நான் பிரதீப் சர்க்காரிடம் இருந்து பலவற்றை கற்றுக்கொண்டேன். அவர் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் கவனித்து, சரியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார். தேவைப்பட்டால், 100 டேக்குகள் கூட எடுக்கிறார். ஒரு பாடலில் நான் அழ வேண்டும். அந்தப் பாடலில் ஒரு குறிப்பிட்ட வரியில் என் கண்ணீர் துளி விழ வேண்டும். இதற்காக 28 டேக்குகள் எடுக்கப்பட்டது. சயிப் எப்பவும் வேடிக்கையானவர். என்னை சிரிக்க வைப்பார். இப்போதும் அந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு சிரிப்பு வரும்'' என்றார்.

மூலக்கதை