தயாரிப்பாளராக இருந்தால் “பிசாசு 2” படத்தை அப்போதே ரிலீசாக்கி இருப்பேன் - ஆன்ட்ரியா

  தினத்தந்தி
தயாரிப்பாளராக இருந்தால் “பிசாசு 2” படத்தை அப்போதே ரிலீசாக்கி இருப்பேன்  ஆன்ட்ரியா

சென்னை, கடந்த 2014-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பிசாசு’. அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே திரைக்கு வருவதில் தாமதமாகி வருகிறது. வழக்கு காரணமாக மூன்று ஆண்டுகளாக இப்படம் வெளியாகாமல் முடங்கி கிடக்கிறது. ஆனாலும், ‘பிசாசு 2’ படத்தில் ‘ஆன்ட்ரியா அப்படி நடித்துள்ளார், இப்படி நடித்துள்ளார்’ என மிஷ்கின் தொடர்ந்து பேசி, படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் பார்த்துக்கொண்டு வருகிறார். இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆன்ட்ரியாவிடம், ‘பிசாசு 2’ படம் எப்போது ரிலீசாகும்? என கேட்கப்பட்டது. இதற்கு, “நடிக்க மட்டும்தான் முடியும். ரிலீசும் நானே செய்யமுடியுமா? நான் மட்டும் தயாரிப்பாளராக இருந்தால் சில ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசாக்கி இருப்பேன். என்ன செய்ய...” என்று வருத்தப்பட்டு கொண்டார். முன்னதாக இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேசை நோக்கி சிலர் மின்விசிறியைத் திருப்ப, அவரது தலைமுடி காற்றில் பறந்தது. நிகழ்ச்சிக்காக கூந்தலை சீவி, சிங்காரித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், இதனால் கடும் ‘அப்செட்' ஆகி போனார். ‘பேனை ஆப் பண்ணுங்க...' என்று அங்கிருப்பவர்களை கடிந்து கொண்டார். பின்னர் உதவியாளர் கலைந்த அவரது கூந்தலை சரிசெய்த பிறகே ஆசுவாசமானார்.

மூலக்கதை