தோல்விகளால் என் தந்தை துவண்டு போனது இல்லை - சுருதிஹாசன்

  தினத்தந்தி
தோல்விகளால் என் தந்தை துவண்டு போனது இல்லை  சுருதிஹாசன்

சென்னை, கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் திரைத்துறையில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருகிறார். கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார்.இவர் தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் 3, வேதாளம், புலி, பூஜை ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். கடைசியாக சலார் முதல் பாகத்தில் நடித்திருந்தார். தற்போது, கூலி, டிரெயின், ஜனநாயகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகை சுருதிஹாசன் தனது காதலன் சாந்தனு ஹஜாரிகாவை 2024-ல் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜுடன் ஆல்பம் ஒன்றிலும் நடித்திருந்தார். ‘நாயகன்’ படத்தைத் தொடர்ந்து, மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் எதிர்பார்ப்பில் உருவான ‘தக்லைப்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதற்கிடையில் கமல்ஹாசன் மகளும், முன்னணி நடிகையுமான சுருதிஹாசனிடம், படங்களின் வெற்றி தோல்வி கமல்ஹாசனை பாதித்தது உண்டா?, என்று கேட்கப்பட்டது. சுருதிஹாசன் கூறுகையில், “என் தந்தை கமல்ஹாசன் படங்களின் வெற்றியால் ஆடியதும் இல்லை. தோல்விகளால் துவண்டு போனதும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், தோல்வி அவரை பாதித்ததே கிடையாது. சம்பாதித்த ஒட்டுமொத்த பணத்தையும் சினிமாவிலேயே போடும், சினிமா விரும்பி அவர். உழைத்து சம்பாதித்த பணத்தில் ஆடம்பர பங்களா, சொகுசு கார் என வாங்க அவர் ஆசைப்பட்டதும் கிடையாது. எல்லாமே சினிமாவுக்குள் அடங்கிப்போகும். மக்கள் நினைப்பது போல நம்பர் கேம் என்ற வலைக்குள் அவர் சிக்கமாட்டார். அந்த விஷயம் அவரை பாதிக்கவும் செய்யாது” என்றார்.

மூலக்கதை