புச்சிபாபு கிரிக்கெட்: மும்பையை வீழ்த்திய தமிழக லெவன் அணி

சென்னை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் புச்சிபாபு கோப்பைக்கான அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 3 நாள் கொண்ட லீக் சுற்று முதல் இன்னிங்ஸ் 90 ஓவர், 2-வது இன்னிங்ஸ் 45 ஓவர் என்ற அடிப்படையில் நடத்தப்படுகிறது. கோஜன் கல்லூரி மைதானத்தில் நடந்த ‘ஏ’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன், இமாசலபிரதேசத்தை எதிர்கொண்டது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணி 274 ரன்னும், இமாசலபிரதேசம் 214 ரன்னும் எடுத்தன. தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த அந்த அணி 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. விமல் குமார் 105 ரன்கள் விளாசினார். பின்னர் 307 ரன் இலக்கை நோக்கி ஆடிய இமாசலபிரதேச அணி 26.1 ஓவர்களில் 110 ரன்னில் சுருண்டது. இதனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணி 196 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வித்யூத் 4 விக்கெட்டும், அச்யுத் 3 விக்கெட்டும் கைப்பற்றினர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அணி தனது அடுத்த ஆட்டத்தில் மராட்டியத்தை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் மும்பை - தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் (சி பிரிவு) அணிகள் மல்லுக்கட்டின. இதில் முதல் இன்னிங்சில் மும்பை 5 விக்கெட்டுக்கு 412 ரன்னும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் 5 விக்கெட்டுக்கு 325 ரன்னும் குவித்து ‘டிக்ளேர்’ செய்தன. 87 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்த மும்பை அணி 178 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் செஞ்சுரி போட்ட சர்ப்ராஸ் கான் இந்த இன்னிங்சில் 36 ரன்னில் கேட்ச் ஆனார். சுழற்பந்து வீச்சாளர் எம்.சித்தார்த் 5 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தார். இதையடுத்து 45 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணி 44.1 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 268 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் சச்சின் (115 ரன்) சதமும், அதீஷ் (57 ரன்) அரைசதமும் அடித்தனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணி அடுத்த லீக்கில் அரியானாவுடன் மோதுகிறது.
மூலக்கதை
