உலகக் கோப்பை போட்டிக்கு இதுதான் சிறந்த அணி - ஹர்மன்பிரீத் கவுர்

  தினத்தந்தி
உலகக் கோப்பை போட்டிக்கு இதுதான் சிறந்த அணி  ஹர்மன்பிரீத் கவுர்

புதுடெல்லி, 13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும். இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம், இந்தூரிலும், இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன. இதன் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘பவர்-பிளேயில் பந்து வீசுவதற்கு ரேணுகா, கிராந்தி இருக்கிறார்கள். அதன் பிறகு மிடில் மற்றும் கடைசி கட்டத்துக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, தீப்தி ஷர்மா, ராதா யாதவ், சினே ராணா உள்ளனர். நமது சுழற்பந்து வீச்சாளர்கள் எப்போதும் நன்றாக செயல்படுகின்றனர். இங்கிலாந்து மண்ணில் கூட கலக்கினர். அதனால் தான் ஆடும் லெவனில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிகமான இடம் கிடைக்கிறது. இது தான் நம்மிடம் உள்ள (உலகக் கோப்பை போட்டிக்கு) சிறந்த அணி’. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை