ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரிசர்வ் அணியில் கூட இடமில்லையா...? - ஆகாஷ் சோப்ரா கேள்வி

மும்பை, 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது. ஆசிய கோப்பை போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இவர்களுடன் ரிசர்வ் வீரர்களாக வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, ரியான் பராக், துருவ் ஜூரெல், ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிரதான அணியில் யாராவது காயமடைந்து விலக நேரிட்டால் அவருக்கு பதிலாக ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு இடம் கிடைக்கும். சமீப காலமாக ஐ.பி.எல். மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அசத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறுவார் என்று அனைவரும் எதிர்பாத்த நிலையில் அவர் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம்பெறாதது பேசு பொருளாகி உள்ளது. இந்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரிசர்வ் அணியில் கூட இடமில்லையா...? என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாதது ஒரு பெரிய செய்தி. ஸ்ரேயாஸ் இன்னும் என்ன செய்ய வேண்டும்?. அவர் ஏற்கனவே செய்ததைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?. 600-க்கும் மேற்பட்ட ரன்கள் கொண்ட ஐபிஎல் சீசன், அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது, சையத் முஷ்டாக் அலி டிராபியில் ரன்கள் குவித்தது, ரஞ்சி விளையாடியது, சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. ஒரு மனிதனாக இவைதான் செய்ய முடியும். இது ஆசிய கோப்பை அணி. இதை உலகக் கோப்பையுடன் இணைக்க வேண்டாம். ஏனெனில் இதற்குப் பிறகு 15 டி20 போட்டிகள் உள்ளன. 15 டி20 போட்டிகளில் உலகம் மாறிவிடும். அவர் ஒருநாள் போட்டிகளில் ரன்கள் குவித்தால், விரைவில் அல்லது பின்னர், ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம்பெறுவார். ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவார் என்று எனக்கு ஒரு வலுவான நம்பிக்கை உள்ளது. ஸ்ரேயாஸின் பெயர் ஐந்து ரிசர்வ் வீரர்களில் கூட இல்லை, இது ஆச்சரியமளிக்கிறது. 15 பேர் அணியில் அவரை சேர்க்க முடியவில்லை என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஏனெனில் அவரை பிளேயிங் லெவனில் விளையாட வைக்க முடியாது. குறைந்தபட்சம் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் ஒரு இடத்தை உருவாக்கியிருக்கலாம். அங்கு தேர்வாளர்கள் துருவ் ஜுரேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் பிரசித் கிருஷ்ணாவை வைத்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் பெயர் அங்கு இருந்திருக்கலாம். அவர்கள் அதையும் வைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மூலக்கதை
