ஒருநாள் தரவரிசையில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி பெயர் நீக்கம் - புதிர் போட்ட ஐ.சி.சி

மும்பை, பேட்ஸ்மேன்களுக்கான புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி இன்று வெளியிட்டது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெளியான பட்டியலில் முதல் 100 இடங்களில் கூட இருவரது பெயர்களும் இடம்பெறவில்லை.கடந்த வாரம் வரை இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 2-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் நீடித்து வந்தனர். ஐ.சி.சி. விதிமுறைப்படி, சுமார் 9 மாத காலம் ஒரு விளையாட்டு வீரர் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றால் அவரது பெயர் தரவரிசை பட்டியலில் இருந்து நீக்கப்படும் அல்லது ஓய்வு அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டும் இவர்கள் விஷயத்தில் நடக்கவில்லை.இந்தச் செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தரவரிசைப் பட்டியலில் இருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டது ஒருவேளை இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார்களோ என்ற வதந்தி பரவியது. 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணியில் இருவருக்கும் இடம் இல்லை என்பதை பி.சி.சி.ஐ மறைமுகமாக தெரிவிக்கிறதா எனவும் சாடி வருகின்றனர். பி.சி.சி.ஐ. இருவரையும் ஓய்வுபெறும்படி கட்டாயப்படுத்திவிட்டதா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ரசிகர்களின் பதற்றம் உச்சத்தை எட்டிய நிலையில் சில மணி நேரங்களுக்குப் பிறகு ஐ.சி.சி தனது தவறைத் திருத்தியது. இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட குழப்பம் எனத் தெரியவந்தது. அதன்பின் ஐ.சி.சி வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் ரோகித் சர்மா 2-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் இடம்பெற்றனர்.
மூலக்கதை
