ஆசிய கோப்பை: முகமது சிராஜை தேர்வு செய்யாதது ஏன்..? - ஹர்பஜன் சிங் கேள்வி

  தினத்தந்தி
ஆசிய கோப்பை: முகமது சிராஜை தேர்வு செய்யாதது ஏன்..?  ஹர்பஜன் சிங் கேள்வி

மும்பை, 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது. ஆசிய கோப்பை போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இவர்களுடன் ரிசர்வ் வீரர்களாக வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, ரியான் பராக், துருவ் ஜூரெல், ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியில் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட முகமது சிராஜுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சிராஜ் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறியதாவது, இந்திய அணியில் முகமது சிராஜை சேர்க்காததன் மூலம் ஒரு எக்ஸ்பேக்டர் வீரரை நமது அணி இழந்துள்ளது. சமீபகாலமாகவே முகமது சிராஜ் மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இங்கிலாந்து மண்ணில் அவர் செயல்பட்ட விதத்தை நீங்கள் பார்க்கையில் அவர் எப்பேர்பட்ட பார்மில் இருக்கிறார் என்பது புரியும். இந்த ஆசிய கோப்பை தொடரில் நிச்சயம் அவர் விளையாடி இருக்க வேண்டும். தொடர்ச்சியாக அவர் விளையாடினால் தான் அவரும் நல்ல டச்சில் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை