ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: அமலாக்கத்துறை உதவி இயக்குனர் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

  தினத்தந்தி
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: அமலாக்கத்துறை உதவி இயக்குனர் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினா். இதன் அடிப்படையில், சினிமா தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர் இந்த சோதனையின்போது, லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய அமலாக்கத் துறை அதிகாரிகள், விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு 'சீல்' வைத்தனா். இதை எதிா்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் தரப்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்ட மனுதாரா்களுக்கு எதிராக அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. அதோடு அவர்களின் அலுவலகங்களுக்கு சீல் வைத்ததையும் ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால், கோர்ட்டு உத்தரவை ஆகாஷ் பாஸ்கரனுக்கு கடந்த 11ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அமலாக்கத்துறையின் இந்த நடவைக்கை கோர்ட்டு அவமதிக்கும் செயல். எனவே இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி முறையீட்டார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு அமலாக்கத்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த வழக்கு கடந்த 6ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கும்படி கோர்ட்டில் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. இதனால், அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ஏற்கனவே 2 முறை அவகாசம் வழங்கியும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை மீண்டும் கால அவகாசம் கேட்பது கண்டிக்கத்தக்கது என கூறி அமலாக்கத்துறைக்கு ஒரு மனுவுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் விகிதம் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஸ் குமார் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மூலக்கதை