ஆசிய கோப்பை கிரிக்கெட்: கில்லுக்கு துணை கேப்டன் பதவி கொடுத்தது சரியானது - கவாஸ்கர்

மும்பை, ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபியில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஐ.பி.எல். போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐய்யருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை தேர்வு செய்யாமல் நிராகரித்தனர். அதேநேரத்தில் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லுக்கு டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அக்சர் படேலின் துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. டி20 அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்காததால் முன்னாள் வீரர்கள் பலர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவை விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் டி20 அணிக்கு சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டதை முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். கில்லுக்கு துணை கேப்டன் பதவி கொடுத்தது சரியே என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக கவாஸ்கர் கூறியதாவது, சுப்மன் கில் சில வாரங்களுக்கு முன்பு தான் டெஸ்டில் 750 ரன்களுக்கு மேல் குவித்தார். அதுமாதிரி நல்ல நிலையில் இருக்கும் ஒரு வீரரை நீங்கள் ஒதுக்கி வைக்க முடியாது. துணை கேப்டன் பதவி வழங்குவது எதிர்காலத்தில் டி20 அணியை வழி நடத்த முடியும் என்பதை அவருக்கு உணர்த்தும் ஒரு வழிமுறையாகும். இது மிகவும் சிறந்த தேர்வு என்று நான் நினைக்கிறேன். இங்கிலாந்தில் முதல் முறையாக டெஸ்ட் அணியை வழி நடத்தி 750-க்கும் மேற்பட்ட ரன்களை சுப்மன் கில் குவித்தது பாராட்டதக்கதாகும். அவர் நெருக்கடியை எப்படி கையாண்டார் என்பதை பார்த்தோம். துணை கேப்டன் பதவி எதிர்கால கேப்டன் பதவிக்கான தெளிவான அறிகுறியாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூலக்கதை
