பாண்ட்யாவிடம் இருக்கும் மிகப்பெரிய பலம் என்னவெனில்... - அபிஷேக் நாயர் கருத்து

  தினத்தந்தி
பாண்ட்யாவிடம் இருக்கும் மிகப்பெரிய பலம் என்னவெனில்...  அபிஷேக் நாயர் கருத்து

மும்பை, இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது மிகச் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தார். அதனை தொடர்ந்து நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக விளையாடியிருந்த அவர் மீண்டும் தற்போது 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்ட பின் அவரது திறனை பாராட்டி இந்திய அணியின் முன்னாள் துணை பயிற்சியாளரான அபிஷேக் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஹர்திக் பாண்ட்யா போன்ற ஒரு வீரர் இந்திய அணிக்கு கிடைத்த விலை மதிப்பில்லா வீரர். ஏனெனில் எத்தனை கிரிக்கெட் வீரர்களுக்கு ஹர்திக் பாண்ட்யா போன்ற திறமை இருக்கும் என்று தெரியாது. பாண்ட்யாவால் புதிய பந்தில் பந்துவீச முடியும். அதேபோன்று போட்டியின் இறுதி கட்டத்தில் டெத் ஓவர்களை பந்துவீச முடியும். அதோடு அனைத்து போட்டிகளிலும் நான்கு ஓவர்களை அவரால் வீச முடியும். அதுமட்டும் இன்றி பேட்டிங்கிலும் ஸ்பின்னர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் என இரண்டு தரப்பினருக்கு எதிராகவும் அதிரடியை வெளிப்படுத்த முடியும். இப்படி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே முழு பலத்தையும் வைத்திருக்கும் அவர் நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு கேம் சேஞ்சர் என்று நான் கூறுவேன். பாண்ட்யாவிடம் இருக்கும் மிகப்பெரிய பலம் என்னவெனில் அவர் அணியில் இருந்தால் மற்ற வீரர்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். ஒரு வீரராக மட்டுமின்றி ஒரு லீடராகவும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றும்போது கூட அழுத்தமான சூழலில் மிகச் சிறப்பாக பந்துவீசி இருந்தார். அதேபோன்று தேவைப்படும் நேரத்தில் அதிரடியாக பேட்டிங் செய்தும் கொடுத்திருந்தார். அதுமட்டும் இன்றி கேப்டனுக்கு உதவியாக ஆலோசனைகளையும் ஒரு லீடராக வழங்கியிருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை