கல்லூரி மாணவி தற்கொலை செய்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட காதலன்... அரியலூரில் சோகம்

  தினத்தந்தி
கல்லூரி மாணவி தற்கொலை செய்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட காதலன்... அரியலூரில் சோகம்

அரியலூர்,அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தென்கச்சி பெருமாள்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் மகன் யுவராஜ் (வயது 22). இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் யுவராஜ் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தா.பழூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ெசன்று யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரியலூர் மாவட்டம் சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகள் சுமத்ரா (18) திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பி.எஸ்சி. ரேடியாலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே வாடகை வீட்டில் தனது தோழிகளுடன் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு சுமத்ரா தனது தோழிகளுடன் உணவு அருந்திவிட்டு ஒன்றாக சேர்ந்து தூங்கியுள்ளார். நள்ளிரவு சக மாணவிகள் எழுந்து பார்த்தபோது, வீட்டுவாசலில் உள்ள மேற்கூரையில் மின்விசிறிக்கான கொக்கியில் சுடிதார் துப்பட்டா மூலமாக சுமத்ரா தூக்கிட்டு தொங்கியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் உடனடியாக திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா போலீசார் சுமத்ராவை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுமத்ராவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், யுவராஜும், சுமத்ராவும் காதலித்து வந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு சுமத்ராவுக்கு, யுவராஜ் போன் செய்துள்ளார். அப்போது அவர் போனை எடுக்காததால், அவருடன் தங்கியிருந்த சக மாணவியை தொடர்பு கொண்டு கேட்டபோது, சுமத்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த யுவராஜ் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து இருவரும் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் காதலியும், காதலனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்யுள்ளது.

மூலக்கதை