போலி உயிலை வைத்து அபகரிக்க முயற்சி... இருட்டுக்கடை விவகாரத்தில் திடீர் திருப்பம்

நெல்லைநெல்லையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருட்டுக்கடை அல்வா திகழ்ந்து வருகிறது. இந்த கடையின் உரிமையாளராக கவிதா சிங் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அந்த கடை உயில் மூலம் தனக்கே சொந்தமானது என்று கவிதா சிங்கின் அண்ணனும், டவுன் வாகையடி முனையில் பேக்கரி நடத்தி வருபவருமான நயன்சிங் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், இருட்டுக்கடை தனக்கே சொந்தம் என்றும், தன்னிடம் அதற்கான உயில் இருப்பதாகவும் கவிதா சிங்கின் சகோதரர் நயன்சிங் அண்மையில் தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், கவிதா சிங் தரப்பில் வழக்கறிஞர் மூலம் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதில், நயன்சிங் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானது. பதிவு செய்யப்படாத போலி உயிலை தயார் செய்து இருட்டுக்கடை உள்ளிட்ட சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கிறார். கடந்த 2020ம் ஆண்டு முதல் எனது கட்சிக்காரரான கவிதாவே இருட்டுக்கடையை நிர்வகித்து வருகிறார். கடையின் உரிமையாளரான சுலோச்சனா பாயின் இறுதி காலத்திலேயே அவரது விருப்பத்தின் பெயரிலேயே கடையை நடத்தி வருகிறார்.சுலோச்சனா பாய் உயிரோடு இருந்த வரை நயன்சிங் எந்த சொத்துக்களுக்கும் உரிமை கோரவில்லை. இருட்டுக்கடை விவகாரத்தில் எந்த வழக்கும் நயன் சிங்கால் தொடரப்படவில்லை. இருட்டுக்கடை தொடர்பாக எவ்வித வழக்கும் அவர் பதிவு செய்யவில்லை. ஆகவே நயன்சிங் கொடுத்த பொது அறிவிப்பை யாரும் நம்ப வேண்டாம். போலி உயில் குறித்து கவிதா தரப்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலக்கதை
