முழுமையான மாநில சுயாட்சியை வென்றெடுப்போம்: உதயநிதி ஸ்டாலின்

  தினத்தந்தி
முழுமையான மாநில சுயாட்சியை வென்றெடுப்போம்: உதயநிதி ஸ்டாலின்

சென்னை,துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், 50 ஆண்டுகளுக்கு முன்பு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.வரலாறு இன்று மீண்டும் திரும்பி இருக்கிறது. சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் மாநில சுயாட்சியை வென்றெடுப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.மாநில உரிமைகளை காக்கவும் -அதனை உறுதி செய்யவும் ஓய்வு பெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் உயர்மட்டக் குழுவினை அமைத்து அறிவித்துள்ளார்கள். ஒன்றியத்தில் ஆள்வோர் அதிகாரக் குவியலில் ஈடுபடும் போதெல்லாம் தமிழ்நாடு தனது அழுத்தமான உரிமைக் குரலை எழுப்பி வருகிறது. மாநில உரிமைக்கான ஜனநாயக போர்க்களத்தில் கழகமும் – கழக அரசும் இன்றும் உறுதியாக நிற்கிறது.இந்த முக்கிய அறிவிப்பை நம் முதல்-அமைச்சர் அவர்கள் வெளியிடும் முன்னரே அதிமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்து அழிக்க முடியாத களங்கத்துக்கு ஆளாகி உள்ளனர். பாஜக உறுப்பினர்களையும் முந்திக் கொண்டு அவையை விட்டு வெளியேறி எஜமானர்களுக்கு தங்களின் அடிமை விசுவாசத்தை காட்டி உள்ளனர்.ஒட்டுமொத்த இந்திய ஒன்றிய மாநிலங்களின் குரலாக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட முதல்-அமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம்.முழுமையான மாநில சுயாட்சியை வென்றெடுப்போம். என தெரிவித்துள்ளார் .

மூலக்கதை