பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது ஐசியு-வில் உள்ளது - ஷாகித் அப்ரிடி விமர்சனம்

லாகூர், அண்மையில் முடிவடைந்த 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது.இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் தனது பிரிவில் (ஏ பிரிவு) கடைசி இடம் பிடித்து பரிதாபமாக வெளியேறியது. இதனால் அந்த அணியை அந்நாட்டின் பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். மேலும் கடந்த ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பைகளிலும் லீக் சுற்றை தாண்டாத அந்த அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அந்த வரிசையில் அந்த அணியின் முன்னாள் கேப்டானான ஷாகித் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது ஐசியு-வில் உள்ளது என்று விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "கடந்த டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ஆல்-ரவுண்டர் ஷதப் கான் தற்போது அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டார். அத்துடன் நியூசிலாந்து தொடரில் டி20 அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் எந்த அடிப்படையில் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டார் என்பது தெரியவில்லை. தகுதியின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படாவிட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் எதுவும் மாறாது. நாங்கள் எல்லா நேரங்களிலும் போட்டிகள் வரும்போது தயாராகுவது குறித்து பேசுகிறோம். போட்டியில் தோல்வி அடையும்போது முடிவு பற்றி பேசுகிறோம். உண்மை என்னவென்றால் தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் இப்போது ஐசியு-வில் இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகள் மற்றும் கொள்கையில் நிலைத்தன்மையில்லை. நாங்கள் கேப்டன்கள், பயிற்சியாளர்கள் அல்லது சில வீரர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறோம். பயிற்சியாளர்கள் தங்களது வேலையை காப்பாற்ற வீரர்களை குறை கூறுவதையும், நிர்வாகிகள் தங்கள் இருக்கையை காப்பாற்ற வீரர்கள் மற்றும் பயிற்சியார்களை குற்றம் சொல்வதையும் பார்க்க வேதனையாக இருக்கிறது. கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் தலைக்கு மேல் தொடர்ந்து கத்தி தொங்கிக் கொண்டிருக்கும்போது எப்படி நமது கிரிக்கெட் முன்னேற முடியும்" என்று கூறினார்.
மூலக்கதை
