கிரைம் ரவுண்ட் அப்: 'காதலன் நீயா, நானா' போட்டியில் வாலிபர் கொலை

தினமலர்  தினமலர்
கிரைம் ரவுண்ட் அப்: காதலன் நீயா, நானா போட்டியில் வாலிபர் கொலை

அரக்கோணம் : அரக்கோணம் அருகே இரு வாலிபர்கள் இடையே சிறுமியை காதலிக்க ஏற்பட்ட காதல் போட்டி, கொலையில் முடிந்தது. ஆத்திரத்தில் கொலை செய்த வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே, தோல்ஷாப் கிடங்கு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, 26, பெயின்டர். கீழ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல், 23, தொழிலாளி; அதே பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியை இருவரும் காதலித்துள்ளனர். இதனால், சிறுமியை காதலிப்பது நீயா, நானா என, வாலிபர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கீழ்குப்பம் இந்திரா நகரில், இருவரும் குடிபோதையில் காதல் விவகாரம் குறித்து தகராறில் ஈடுபட்டனர். இதில், ஆத்திரமடைந்த மைக்கேல் கத்தியால் குத்தியதில் மாரிமுத்து இறந்தார். சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த அரக்கோணம் போலீசார் மைக்கேலை நேற்று கைது செய்து, அரக்கோணம் சிறையில் அடைத்தனர்.

ஈ.வெ.ரா., சிலைக்கு எதிர்ப்பு கனல் கண்ணன் கைது

சென்னை : 'ஸ்ரீரங்கத்தில் உள்ள, ஈ.வெ.ரா., சிலையை உடைக்க வேண்டும்' என பேசிய, சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், 59, கைது செய்யப்பட்டார்.
சென்னை, மதுரவாயலில், ஜூலையில் ஹிந்து முன்னணி சார்பில் உரிமை மீட்பு பிரசார பொது கூட்டம் நடந்தது. இதில், அந்த அமைப்பின் கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் பேசினார். அப்போது, 'திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோவில் எதிரே, கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை உள்ளது. அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ, அன்று தான் ஹிந்துக்களின் எழுச்சி நாள்' என, கூறினார்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், கனல் கண்ணன் மீது, வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். அவர் முன்ஜாமின் கோரி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்: மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், கனல் கண்ணன், புதுச்சேரியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கைது செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வரும், 29ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

15 வயது சிறுமி கர்ப்பம்: வாலிபர் கைது

திருச்சி : துறையூர் அருகே, 15 வயது சிறுமியை திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய வாலிபரை, மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, கிருணாபுரத்தை சேர்ந்த கண்ணன், 25, என்பவருக்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பச்சை பெருமாள்பட்டியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்தனர்.திருமணத்துக்கு பின், கண்ணன், வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கொண்டதால், திருமணமான 20 நாட்களில், சிறுமி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதில், கர்ப்பமான சிறுமிக்கு, நேற்று முன்தினம், பிரசவ வலி ஏற்பட்டது. உடனே, பச்சை பெருமாள்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கு டாக்டர் வர தாமதமானதால், பஞ்சாயத்து அலுவலகத்தில் தங்கியிருந்த போது, சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.
தகவல் அறிந்து, முசிறி மகளிர் போலீசாரும், சமூக நலத்துறையினரும் அங்கு சென்ற போது, சிறுமியையும், குழந்தையையும் அப்படியே போட்டு, பெற்றோர் தப்பி விட்டனர். போலீசார், சிறுமியையும், குழந்தையையும் மீட்டு, திருச்சி, அரசு மருத்துவமனையில் சேர்த்த போது, குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, முசிறி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கண்ணனை கைது செய்தனர். 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்த பெற்றார் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

பஸ் மோதி தம்பதி பலி

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே துக்க வீட்டுக்கு சென்று திரும்பிய தம்பதி, அரசு பஸ் மோதி பலியாகினர்.
மதுரை மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்தவர் மோகன் 60. இவரது மனைவி பாண்டியம்மாள் 55. உசிலம்பட்டியில், உறவினர் இறந்த துக்க வீட்டுக்கு 'டூ - வீலரில்' ஹெல்மெட் அணியாமல் சென்ற இருவரும் மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.நேற்று பகல், 2:10 மணிக்கு கருமாத்துார் அருகே சென்றபோது, மதுரை சென்ற அரசு பஸ் இவர்களின் வாகனம் மீது மோதியது.தலையில் காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். செக்கானுாரணி போலீசார்விசாரிக்கின்றனர்.

வைகையில் குளித்த வாலிபர்கள் மாயம்

வாடிப்பட்டி : மதுரை அருகே பரவை வைகை ஆற்றில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்ட இரு வாலிபர்களை தீயணைப்பு துறையினர் தேடுகின்றனர்.
மதுரை தெற்கு வாசல் சீனிவாசன் மகன் தனசேகரன், 23, திருமங்கலம் ஞானமணி மகன் கண்ணன், 20; பட்டதாரி வாலிபர்கள். இவர்கள் இருவரும் நேற்று துவரிமான் முத்தையா சுவாமி கோவிலுக்கு உறவினர்களுடன் வந்திருந்தனர்.பின் கோவில் எதிரே பயன்பாட்டிற்கு வராத துவரிமான் - -பரவை வைகை ஆற்று பாலத்தின் கீழ் குளித்த போது, திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து வந்த மதுரை தீயணைப்பு, மீட்பு குழுவினர் வாலிபர்களை தேடி வருகின்றனர்.

இரு தரப்பினர் பயங்கர மோதல்

மயிலாடுதுறை : சீர்காழி அருகே சிறுமியை கேலி செய்ததால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மாதானம் கிராம கோவில் திருவிழாவிற்கு அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி தாயுடன் வந்துள்ளார்.அங்கிருந்த இளைஞர்கள் சிலர் சிறுமியின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து கேலி செய்துள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக உருவானது.இதில் சிறுமியை கேலி செய்தவர்கள் தரப்பைச் சேர்ந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
தொடர்ந்து இரு தரப்பினரும் பயங்கரமாக மோதியதில் மூவர் படுகாயம் அடைந்து, சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.புதுப்பட்டினம் போலீசார் இரு தரப்பினர் மீதும் கொலை முயற்சி மற்றும் 'போக்சோ' வழக்கு பதிவு செய்து, மாதானம் கிராமத்தைச் சேர்ந்த மூவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

பவனியில் புகுந்தது லாரி; பெண் உட்பட 2 பேர் பலி

பாப்பிரெட்டிப்பட்டி : கடத்துார் அருகே, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சுவாமி ஊர்வலத்தில் புகுந்ததில், பெண் உட்பட இருவர் இறந்தனர்.
தர்மபுரி மாவட்டம், கடத்துாரை அடுத்த சில்லாரஹள்ளியில், பச்சியம்மன் கோவில் திருவிழா, நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு நடந்தது.அலங்கரித்த அம்மனை 'டாடா ஏஸ்' வாகனத்தில் வைத்து, அப்பகுதி மக்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர். அப்போது, அவ்வழியே வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து, 'டாடா ஏஸ்' வாகனத்தின் பின்பக்கமாக மோதி, ஊர்வலத்திலும் புகுந்தது.
இதில், டாடா ஏஸ் வாகன டிரைவர் செந்தில்குமார், 45, ஊர்வலத்தில் சென்ற பெண் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ஐந்து பேரும் சேர்க்கப்பட்டனர். இதில், நேற்று அதிகாலை சுப்பிரமணி, கோவிந்தம்மாள் இறந்தனர். கடத்துார் போலீசார் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்தி தப்பிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

நர்சிங் மாணவி தற்கொலை; பேராசிரியர்களிடம் விசாரணை

குடியாத்தம் : குடியாத்தத்தில், நர்சிங் மாணவி தற்கொலையில், ஆந்திரா பேராசிரியர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் காமாட்சிபேட்டையை சேர்ந்தவர் கார்த்திகாதேவி, 21, ஆந்திர மாநிலம் சித்துார் அருகே தனியார் நர்சிங் கல்லுாரியில் இறுதியாண்டு படித்தார். தொடர் விடுமுறைக்காக கடந்த, 13ல் குடியாத்தம் வந்தார். நேற்று முன்தினம் மதியம் வரை வீட்டின் அறைக்கதவு திறக்காததால், மாணவியின் தந்தை குமரேசன், போலீசில் புகார் செய்தார்.
குடியாத்தம் போலீசார் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மின்விசிறியில் ‍சேலையால் துாக்கிட்டு, மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. அவர் பையில் இருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், கல்லுாரியை சேர்ந்த ஆந்திராவைச் சேர்ந்த சில பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டதாக எழுதியிருந்தார்.இதையடுத்து குடியாத்தம் போலீசார், அக்கல்லுாரிக்கு நேற்று சென்றனர். ஐந்து பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.

தேசிய நிகழ்வுகள்:

சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

காங்கர் : சத்தீஸ்கரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கரில் காங்கர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் இர்பனார் கிராமத்தில், ஒரு தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் நேற்று இரவு துாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில், ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அம்பானிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

மும்பை : ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை மும்பை போலீசார் கைது செய்தனர்.

'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் முகேஷ் அம்பானியின் அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு நேற்று தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், முகேஷ் அம்பானிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.
நான்கு முறை தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு, அவர் மிரட்டல் விடுத்தார். இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. விசாரணையை துவக்கிய போலீசார், மிரட்டல் விடுத்த நபரின் போன் எண்ணை கண்டுபிடித்து, அவரை கைது செய்தனர். அவர் பெயர் அப்சல் என தெரியவந்துள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தந்தை, சகோதரிகள் கொலை; இளைஞர் வெறிச்செயல்

பாக்பத் : உத்தர பிரதேசத்தில், சொத்து தகராறில் தன் தந்தையையும், இரண்டு சகோதரிகளையும் கொலை செய்த 20 வயது இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
உ.பி.,யில் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிஜ்பலுக்கு, 60, அமர் என்ற மகன் உள்ளார். அமர், தன் தந்தையிடம் தனக்குரிய சொத்தை பிரித்துத் தர வேண்டும் என அடிக்கடி தகராறு செய்துள்ளார். ஆனால், அவர் தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளானதால், அவருக்கு சொத்து இல்லை என பிரிஜ்பல் கூறியுள்ளார்.
இதில், ஆத்திரமடைந்த அமர், தன்னுடைய தந்தையை கூரான ஆயுதத்தால் குத்தியுள்ளார். இதை தடுக்க முயன்ற, 17 மற்றும் 24 வயதான இரண்டு சகோதரிகளையும் அவர் குத்தியுள்ளார். இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, அமர் தப்பியோடிவிட்டார். சம்பவம் குறித்து அவரது தாய் அளித்த புகாரின்படி போலீசார் கொலையாளியை தேடி வருகின்றனர்.

தேசியக்கொடி ஏற்றியபோது மின்சாரம் தாக்கி 5 பேர் பலி

ராஞ்சி : ஜார்க்கண்டில், இருவேறு இடங்களில், தேசியக்கொடியை ஏற்ற முயன்றபோது, மின்சாரம் தாக்கி நேற்று ஐந்து பேர் உயிரிழந்தனர்.
ஜார்க்கண்டில், ராஞ்சி மாவட்டத்தில் ஒரு வீட்டின் மாடியில் தேசியக்கொடியை ஏற்ற இரும்புக் கம்பியை பயன்படுத்தியுள்ளனர். அது அருகிலிருந்த உயர் அழுத்த மின் கம்பியில் உரசியுள்ளது. அப்போது, மழை பெய்து கொண்டிருந்த நிலையில், கம்பியில் மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
இதேபோல், தன்பாத் மாவட்டத்தில், நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் சிலர் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு கம்பத்தை நட்டுள்ளனர். அதுவும் உயர் அழுத்த மின்கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதே பகுதியில் உள்ள காவல் நிலையம் அருகே கொடியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்; இருவர் காயமடைந்தனர்.

உலக நிகழ்வுகள்:

சூச்சிக்கு 6 ஆண்டு சிறை

பாங்காக் : மியான்மரின், மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு கட்சியின் தலைவரும், அரசு ஆலோசகருமான ஆங் சான் சூச்சிக்கு மற்றொரு ஊழல் வழக்கில், அந்நாட்டு நீதிமன்றம் ஆறு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இந்த வழக்கில் சூச்சி, தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, பொது நிலத்தை சந்தை விலையை விட குறைவான விலைக்கு வாடகைக்கு எடுத்து, நன்கொடைகள் வாயிலாக குடியிருப்பை கட்டியது, ரகசிய சட்டத்தை மீறியது மற்றும் பொது அமைதியின்மையை தூண்டியது உட்பட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்கில், அவருக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அரக்கோணம் : அரக்கோணம் அருகே இரு வாலிபர்கள் இடையே சிறுமியை காதலிக்க ஏற்பட்ட காதல் போட்டி, கொலையில் முடிந்தது. ஆத்திரத்தில் கொலை செய்த வாலிபர் போலீசாரால் கைது

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை