முதல்வருக்கான அரசு இல்லத்தை இரவோடு இரவாக காலி செய்த உத்தவ் தாக்கரே.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் எனவும் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
முதல்வருக்கான அரசு இல்லத்தை இரவோடு இரவாக காலி செய்த உத்தவ் தாக்கரே.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் எனவும் அறிவிப்பு

மும்பை:  மகாராஷ்டிரா அரசியலில் நடக்கும் குழப்பங்களுக்கு இடையே முதல்வர் உத்தவ் தாக்கரே தனது அரசு இல்லத்தை காலி செய்து சொந்த வீட்டிற்கு சென்றுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்ந்த மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 46 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஏக்நாத் ஷிண்டே தரப்பில், சிவசேனா - காங்கிரஸ் கட்சி கூட்டணியை எதிர்ப்பதாகவும், பாஜகவுடன் கூட்டணி வைத்து மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கப்பட்டது.இதனிடையே, ஷிண்டேவுக்கு சவால் விடும் வகையில், பேஸ்புக் வாயிலாக மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் உத்தவ் தாக்கரே, ‘‘முதல்வர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்ய தயார். எனக்கு அடுத்ததாக முதல்வர் பதவியில் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் அமர்வதில் எனக்கு மகிழ்ச்சிதான். சிவசேனா தலைவர் பதவியில் இருந்தும் விலக தயாராக இருக்கிறேன். கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் யாராவது நேரில் வந்து என்னிடம் கேட்டால், ராஜினாமா கடிதத்தை தர தயாராக இருக்கிறேன். இது ஒன்றும் நாடகமல்ல. கடிதத்தை தயாராகவே வைத்துள்ளேன்’’  என பேசியுள்ளார்.இந்த நிலையில், முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வ இல்லமான வெர்சா இல்லத்திலிருந்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பெட்டி படுக்கையுடன் சொந்த வீட்டுக்கு புறப்பட்டார். நேற்று இரவே குடும்பத்தோடு காலி செய்துவிட்டு பாந்த்ராவில் உள்ள சொந்த வீடான மாதோஸ்ரீ இல்லத்திற்கு சென்றுவிட்டார். பெரிய பெரிய பெட்டிகள் வர்ஷா இல்லத்தில் இருந்து காருக்கு எடுத்துச்செல்லும் வீடியோ வெளியாகி வைரலானது. உத்தவ் தாக்கரேயின் பாந்த்ரா வீட்டிற்கு வெளியில் ஏராளமான கட்சி தொண்டர்கள் காத்திருந்து உத்தவ் தாக்கரேயை வரவேற்றனர். உத்தவ் தாக்கரேயிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. அப்படி இருந்தும் இரவோடு இரவாக அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு சொந்த வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மூலக்கதை