நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை கால அவகாசம்!!

தினகரன்  தினகரன்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை கால அவகாசம்!!

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை அவகாசம் வழங்கியுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக  விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி, கடந்த 13, 14, 15, 20 மற்றும் 21ம் தேதிகளில் டெல்லி அமலாக்கத் துறை  அலுவலகத்தில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் இதுவரை மொத்தம் 50 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.இதற்கிடையே, கொரோனா தொற்று காரணமாக சோனியா காந்தி மட்டும் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார். கடந்த 12ம் தேதி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இருதினங்களுக்கு முன் வீடு திரும்பினார்.இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை ஏற்கனவே சம்மனை ஏற்று சோனியா காந்தி இன்று விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசாரணைக்கு ஆஜராவதை மேலும் சில வாரங்களுக்கு ஒத்திவைக்கும்படி  அமலாக்கத் துறைக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். இத்தகவலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `கொரோனா, நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டதால் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்று சோனியா காந்திக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எனவே, முழுமையாக குணம் அடையும் வரையில் மேலும் சில வாரங்களுக்கு விசாரணையை ஒத்திவைக்கும்படி அமலாக்கத் துறைக்கு சோனியா கடிதம் எழுதியுள்ளார்,’ என்று கூறியுள்ளார்.இந்த நிலையில் கோரிக்கையை ஏற்று, நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை அவகாசம் கொடுத்துள்ளது. சோனியா காந்தி இன்று விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது அமலாக்கத்துறை. இருப்பினும் சோனியா காந்தி எப்போது ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை தேதி குறித்த அறிவிப்பை தெரிவிக்கவில்லை.

மூலக்கதை