மழையால் ஆட்டம் பாதிப்பு 7 ரன்னில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி: கேகேஆர் ஏமாற்றம்

தினகரன்  தினகரன்
மழையால் ஆட்டம் பாதிப்பு 7 ரன்னில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி: கேகேஆர் ஏமாற்றம்

மொகாலி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டம், கனமழையால் பாதிக்கப்பட்ட நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி டிஎல்எஸ் விதிப்படி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீசியது. பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷிகர் தவான் இருவரும் பஞ்சாப் கிங்ஸ் இன்னிங்சை தொடங்கினர். முதல் 2 ஓவரையும் எதிர்கொண்ட பிரப்சிம்ரன் 23 ரன் விளாசி (12 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) சவுத்தீ வேகத்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ் வசம் பிடிபட்டார். அடுத்து தவானுடன் பானுகா ராஜபக்ச இணைந்தார்.பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்தது. ராஜபக்ச 50 ரன் (32 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். ஜிதேஷ் ஷர்மா 21 ரன் (11 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), ஷிகர் தவான் 40 ரன் (29 பந்து, 6 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தனர். சிக்கந்தர் ரஸா 16 ரன் (13 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து சுனில் நரைன் சுழலில் ராணா வசம் பிடிபட்டார்.பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன் குவித்தது. சாம் கரன் 26 ரன் (17 பந்து, 2 சிக்சர்), ஷாருக் கான் 11 ரன்னுடன் (7 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் டிம் சவுத்தீ 2, உமேஷ் யாதவ், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேகேஆர் அணி களமிறங்கியது. மின்விளக்குகள் பழுது காரணமாக கேகேஆர் இன்னிங்ஸ் தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. பின்னர் தொடங்கிய ஆட்டத்தில், மன்தீப் சிங் 2 ரன், அனுகுல் ராய் 4 ரன் எடுத்து அர்ஷ்தீப் சிங் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க, கொல்கத்தா அணி 2 ஓவரில் 17 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது.ரஹ்மானுல்லா குர்பாஸ் 22 ரன் விளாசி எல்லிஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். வெங்கடேஷ் அய்யர் - கேப்டன் நிதிஷ் ராணா ஜோடி 4வது விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. ராணா 24 ரன், ரிங்கு சிங் 4 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கேகேஆர் 10.1 ஓவரில் 80 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், வெங்கடேஷ் - ஆந்த்ரே ரஸ்ஸல் இணைந்து 6வது விக்கெட்டுக்கு அதிரடியாக 50 ரன் சேர்த்தனர்.இதனால், கொல்கத்தா அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது.ரஸ்ஸல் 35 ரன் (19 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), வெங்கடேஷ் 34 ரன் (28 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழக்க, வெற்றி யாருக்கு என்பதில் இழுபறி நிலவியது. கொல்கத்தா அணி 16 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்திருந்த நிலையில், கனமழை கொட்டியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஷர்துல் தாகூர் 8 ரன், சுனில் நரைன் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப் 3, சாம், எல்லிஸ், சிக்கந்தர், ராகுல் சாஹர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.மழை தொடர்ந்து பெய்ததால், டிஎல்எஸ் விதிப்படி பஞ்சாப் கிங்ஸ் அணி 7 ரன் வித்தியாசத்தில் வென்றதாக நடுவர்கள் அறிவித்தனர். அர்ஷ்தீப் சிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பஞ்சாப் 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. வெற்றி வாய்ப்பு இருந்தும், மழை காரணமாக தோல்வியைத் தழுவ நேர்ந்தது கேகேஆர் அணி வீரர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

மூலக்கதை