கைல் மேயர்ஸ் 73 ரன் விளாசல் லக்னோ ரன் குவிப்பு

தினகரன்  தினகரன்
கைல் மேயர்ஸ் 73 ரன் விளாசல் லக்னோ ரன் குவிப்பு

லக்னோ: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கைல் மேயர்சின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசியது. கேப்டன் கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் இருவரும் லக்னோ இன்னிங்சை தொடங்கினர். ராகுல் 8 ரன் எடுத்து சகாரியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து கைல் மேயர்சுடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்து அசத்தியது. குறிப்பாக, சிக்சர்களாகப் பறக்கவிட்டு கேப்பிடல்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்த மேயர்ஸ் 28 பந்தில் அரை சதம் அடித்தார்.ஹூடா 17 ரன், மேயர்ஸ் 73 ரன் (38 பந்து, 2 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். ஸ்டாய்னிஸ் 12, நிகோலஸ் பூரன் 36 ரன் (21 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), ஆயுஷ் பதோனி 18 ரன் விளாசி விக்கெட்டை பறிகொடுக்க, லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது. க்ருணால் பாண்டியா 15 ரன், கிருஷ்ணப்ப கவுதம் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் கலீல், சகாரியா தலா 2, அக்சர், குல்தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 194 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் டெல்லி களமிறங்கியது.

மூலக்கதை