கலாஷேத்ரா விவகாரத்தில் நடவடிக்கை : முதல்வர் உறுதி!

தினமலர்  தினமலர்
கலாஷேத்ரா விவகாரத்தில் நடவடிக்கை : முதல்வர் உறுதி!

சென்னை, ஏப். 1- கலாஷேத்ரா கல்லுாரியில், மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில், மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்படும், கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணிதேவி நுண்கலை கல்லுாரி உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கி, 200க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர், பரதம் மற்றும் இசை உள்ளிட்ட கலைகளை பயின்று வருகின்றனர்.

கலாஷேத்ராவில் பணிபுரியும் உதவி பேராசிரியர் ஹரிபத்மன், மேடை இசை மற்றும் நாடகத் துறை பேராசிரியர்கள் சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன் ஆகியோர், மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவர்கள், மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

சட்டசபையில்...



இந்த விவகாரம் சட்டசபையில் நேற்று எதிரொலித்தது. கலாஷேத்ரா மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.

அதற்கு பதிலளித்து, முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் இயங்கும், கலாஷேத்ரா பவுண்டேஷன் விவகாரத்தை பொறுத்தவரை, தேசிய மகளிர் ஆணையம் முதலில் தானாக முன்வந்து, 'பாலியல் தொல்லை' என, சமூக வலைதளத்தில் செய்தி போட்டது.

கடந்த மாதம் 21ம் தேதி நடவடிக்கை எடுக்கக் கோரி, டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதியது. கலாஷேத்ரா பவுண்டேஷன் இயக்குனர், டி.ஜி.பி.,யை சந்தித்து, தங்கள் நிறுவனத்தில் பாலியல் புகார் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

பின்னர், தேசிய மகளிர் ஆணையம், விசாரணையை முடித்து வைத்து விட்டதாக, கடந்த மாதம் 25ம் தேதி டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதியது.

கடந்த 29ம் தேதி, மீண்டும் தேசிய மகளிர் ஆணைய தலைவரே வந்து, 210 மாணவியரிடம் விசாரித்து சென்றுள்ளார். அப்போது, காவல் துறையினர் தங்களுடன் வரத் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், மாணவியர் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தின் விளைவாக, கலாஷேத்ரா கல்லுாரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுதிகளை விட்டு மாணவியர் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் கவனத்துக்கு வந்ததும், மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்தேன். மேலும் விபரங்களை அறிய, கோட்டாட்சியர், தாசில்தார், போலீஸ் இணை கமிஷனர், துணை கமிஷனர் மற்றும் அலுவலர்கள், அங்கு சென்று விசாரித்தனர்.

நேற்று காலை மீண்டும் வருவாய் துறை மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், அங்கு சென்று மாணவியர் மற்றும் நிர்வாகத்தினருடன் பேசினர்.

அங்குள்ள மாணவியரின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, ஒரு பெண் இன்ஸ்பெக்டர் தலைமையில், போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

அரசை பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய சட்ட ரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

கலாஷேத்ரா மாணவியர் தெரிவித்த பாலியல் புகார் குறித்து, மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி நேரில் விசாரணை நடத்தினார்.

பின்னர், அவர் அளித்த பேட்டி:



'ஆன்லைனில்' ஐந்து மாணவியரிடமும், நேரில் 12 மாணவியரிடமும் விசாரணை நடத்தினேன். ஒவ்வொரு மாணவியும், ஒவ்வொரு விதமான புகாரை தெரிவித்துள்ளனர்; எழுத்துப்பூர்வமாகவும் புகார் தெரிவித்துள்ளனர். நான்கு பேர் மீது புகார்கள் கூறினர். நிர்வாக தரப்பில் பேச யாரும் இல்லை. கலாஷேத்ரா இயக்குனரிடம் விசாரணை நடத்த இருக்கிறேன்.

போராட்டத்தை கைவிட்டு, கல்லுாரி விடுதிக்கு திரும்புமாறு மாணவியரிடம் வேண்டுகோள் விடுத்தேன். மாணவியர் தெரிவித்த புகார்கள், ஆதாரங்கள் அடிப்படையில், நாளை மறுதினம் அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளேன். அதற்கு முன்னர் எதுவும் கூற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

பாலியல் தொல்லை பற்றி, கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர், அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்தார். அது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்லுாரிக்கு பாதுகாப்பு அளித்து வருகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக, சமூக வலைதளத்தில் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்.



- பிரேம் ஆனந்த் சின்கா,

போலீஸ் கூடுதல் கமிஷனர், தெற்கு மண்டலம், சென்னை



பாலியல் தொல்லை குறித்து, மாணவியர் சிலர் கூறியதாவது:

எங்கள் கல்லுாரியில், 2008ல் இருந்து, உதவி பேராசிரியர் ஹரிபத்மன் உள்ளிட்ட நான்கு பேர், மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

பரதம் சொல்லிக் கொடுக்கும் போது, தகாத இடங்களில் தொடுவதுடன், தனிமையில் சந்திக்க வலியுறுத்தி, மன உளைச்சலையும் ஏற்படுத்துகின்றனர்.

ஆதாரங்கள்



நள்ளிரவிலும், சமூக வலைதளம் வாயிலாக, 'சாட்டிங்' மற்றும் 'வீடியோ கால்' பேசுவது என, பாலியல் தொல்லை எல்லை மீறி விட்டது. மாணவர்களை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தும், தொல்லை தரப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்லுாரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரனிடம் புகார் அளித்தோம். 'இதற்கெல்லாம் என்ன ஆதாரம்' என்று கேட்கிறார். பாலியல் தொல்லை குறித்து, 'வீடியோ' எடுத்துக் காட்டவா முடியும்; அப்படியும் சில ஆதாரங்களை சமர்ப்பித்தோம்.

'விசாரணை நடத்தி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். நாங்களும் டிசம்பரில் இருந்து காத்திருந்தோம். அதன் பின்னரும் பாலியல் தொல்லைகள் தொடர்ந்தன.

குற்றச்சாட்டு சுமத்தப்படும் ஹரிபத்மன் உள்ளிட்ட நால்வரும் வழக்கம் போல, கல்லுாரியில் மிகவும் மரியாதையாக நடத்தப்படுகின்றனர்; வகுப்பு எடுக்கின்றனர்; நடன நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

நடவடிக்கை



இவர்களிடம் எவ்வித குற்ற உணர்வும் இல்லை. ஆனால், பாதிக்கப்பட்ட மாணவ - மாணவியர் தான், வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வந்தோம்.

எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து, தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என நம்பினோம்.

டி.ஜி.பி.,க்கு ஆணையம் கடிதம் எழுதியதும், எங்களுக்கு நீதி கிடைத்து விடும் என்றிருந்தோம். ஆனால், தேசிய மகளிர் ஆணையம், கடிதத்தை வாபஸ் வாங்கியது. இது, எங்கள் நம்பிக்கையை சிதைத்தது. பாலியல் தொல்லையை மூடி மறைக்கும் முயற்சி நடக்கிறது.

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, எங்களிடம் விசாரணை நடத்தினார். அவருடன் கல்லுாரி இயக்குனர், மற்ற நிர்வாகிகள் இருந்தனர். அப்படிப்பட்ட சூழலில், எங்களால் எப்படி பாலியல் ரீதியாக நடந்த தொல்லைகள் குறித்து, வெளிப்படையாக எப்படி தெரிவிக்க முடியும்?

ஹரிபத்மன் உள்ளிட்ட நால்வர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை, உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என அறிவித்திருந்தோம். ஆனால், அரசும், போலீசும் உறுதி அளித்துள்ளதை தொடர்ந்து, போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



சென்னை, ஏப். 1- கலாஷேத்ரா கல்லுாரியில், மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

மூலக்கதை