வண்ணமயமான தொடக்க விழா
ஐபிஎல் டி20 தொடரின் 16வது சீசன் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் பிரமிப்பூட்டும் டிரோன் காட்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த தொடக்க விழாவில் பாலிவுட் பாடகர் அர்ஜித் சிங் பிரபலமான கபிரா, கேசரியா, ஜுமே ஜோ பதான் பாடல்களை உற்சாகமாகப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். நடிகை தமன்னா ‘மனசோ இப்ப தந்தியடிக்குது’ பாடலுக்கும், நடிகை ராஷ்மிகா மந்தனா ‘நாட்டு... நாட்டு’ பாடலுக்கும் அசத்தலாக நடனமாடி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினர். டிரோன்களால் வடிவமைக்கப்பட்ட பிரமாண்டமான ஐபிஎல் கோப்பை அனைவரையும் பிரமிக்க வைத்தது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் ஆர்வமுடன் திரண்டதால் மோடி ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ்.தோனி, குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா இருவரும் கலைஞர்கள் புடைசூழ மைதானத்தில் வலம்வந்தபோது ரசிகர்களின் ஆரவாரத்தில் அரங்கமே அதிர்ந்தது. தொடக்க விழாவின் முடிவில் குஜராத் - சென்னை அணிகள் மோதிய முதல் லீக் ஆட்டம் நடைபெற்றது.