16வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று தொடக்கம்: குஜராத் டைட்டன்ஸ்-சிஎஸ்கே முதல் போட்டியில் மோதல்.! வெற்றியுடன் தொடங்கப்போவது யார்?
அகமதாபாத்:கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 10 அணிகள் பங்கேற்கும் 16வது சீசன் ஐபிஎல் டி.20 தொடர் இன்று தொடங்குகிறது. மே 28ம்தேதி வரை நடைபெறும் இந்த தொடரில், சென்னை, மும்பை, அகமதாபாத், ஐதராபாத், டெல்லி உள்பட 12 நகரங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ-பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பி-பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், எதிர் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். மொத்தம் 70 லீக் போட்டிகள் நடக்கிறது. இந்த சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி `பிளேஆப்’ சுற்றுக்குள் நுழையும். 3 ஆண்டுகளுக்கு பின் அணிகள் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோத உள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த சீசனில் 14 போட்டிகளில் 4 வெற்றிகள் மட்டுமே பெற்று 9வது இடத்தை பிடித்த சிஎஸ்கே இந்த முறை சாதிக்கும் முனைப்பில் உள்ளது. 41 வயதான கேப்டன் டோனிக்கு இது தான் கடைசி ஐ.பி.எல். தொடராக இருக்கும். ருதுராஜ் கெய்க்வாட், டொவன் கான்வே துவக்க வீரர்களாக களம் இறங்குவர். அம்பத்தி ராயுடு, ரகானே, மொயீன் அலி, ஷிவம் துபே பேட்டிங்கிற்கு வலுசேர்ப்பர். ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கால் முட்டி பிரச்னையால் அவதிப்படுவதால் சில போட்டிகளில் பந்துவீசமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிரிட்டோரியஸ், தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னர், தேஷ் பாண்டே அசத்த காத்திருக்கின்றனர். மறுபுறம் நடப்பு சாம்பியன் குஜராத் அணியில் சுப்மன் கில், விருத்திமான் சஹா, கேப்டன் ஹர்திக் பாண்டியா, ராகுல் திவாட்டியா, மேத்யூ வேட் என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. பவுலிங்கில் சாய் சுதர்சன், ரஷித்கான், முகமது ஷமி, அல்ஜாரி ஜோசப் மிரட்டலாம். டேவிட் மில்லர் நெதர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஆடுவதால் முதல் இரு ஆட்டங்களில் விளையாடமாட்டார். கடந்த முறை அறிமுகமான முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்ற குஜராத், லீக் சுற்றில் 2 போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடி சிஎஸ்கேவுக்கு உள்ளது. இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை தொடங்க முனைப்பு காட்டும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ். ஜியோ சினிமாஸ் வெப் தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. முதல் போட்டிக்கு முன்னதாக கண்கவர் தொடக்க விழா நடக்கிறது. மாலை 6 மணிக்கு தொடங்கி 45 நிமிடங்கள் நடக்கும் தொடக்க விழாவில் நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா மந்தனா நடனமாடுகின்றனர். பஞ்சாப் பாடகர் அரிஜித் சிங்கும் இசை நிகழ்ச்சியால் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். சிஎஸ்கே அணி: டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், ஷிவம் துபே, எம்எஸ் டோனி (கே), ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், டுவைன் பிரிட்டோரியஸ், சிம்ரஜீத் சிங்/ துஷார் தேஷ்பாண்டே. குஜராத் அணி: சுப்மான் கில், விருத்திமான் சாஹா (வி.கீ.), கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா (கே), மேத்யூ வேட், ராகுல் திவாட்டியா, ரஷித்கான், சாய் கிஷோர், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப், முகமது ஷமி.