பஞ்சாப் போலீசுக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டு வந்த ‘காலிஸ்தான்’ ஆதரவு தலைவன் தப்பியோட்டம்: 78 பேர் கைது; 144 தடை உத்தரவு; மாநிலம் முழுவதும் உஷார்

தினகரன்  தினகரன்
பஞ்சாப் போலீசுக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டு வந்த ‘காலிஸ்தான்’ ஆதரவு தலைவன் தப்பியோட்டம்: 78 பேர் கைது; 144 தடை உத்தரவு; மாநிலம் முழுவதும் உஷார்

ஜலந்தர்: பஞ்சாபில் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் போலீசார் தேடி வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் மாநிலத்தை பிரித்து ‘காலிஸ்தான்’ என்ற பெயரில் தனி நாடு உருவாக்கும் நோக்குடன் வெளிநாடுகளில் இருந்து இன்றும் சீக்கியர்கள் பலர் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங், பஞ்சாபில் இதற்கான முன்னெடுப்பை செயல்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. கடந்த மாதம் இவரது உதவியாளர் ஒருவரை கடத்தல் வழக்கில் அமிர்தசரஸ் புறநகர் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கத்தி மற்றும் துப்பாக்கி ஏந்திய தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை அம்ரித் பால் சிங் முற்றுகையிட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது உதவியாளர் விடுதலை செய்யப்பட்டார்.இந்நிலையில் அம்ரித் பால் சிங்கின் உதவியாளர்கள் சிலரை மெகத்பூர் பகுதியில் பஞ்சாப் போலீசார் நேற்று கைது செய்தனர். முன்னதாக, ஜலந்தரில் அம்ரித் பால் சிங்கை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் இத்தகவலை முன்கூட்டியே அறிந்த அம்ரித்பால் சிங். ஒரு வாகனத்தில் தப்பிச் சென்றார். பஞ்சாபில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் அம்ரித் பால் சிங்கை தேடப்படும் குற்றவாளியாக பஞ்சாப் போலீசார் அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஜலந்தர் போலீஸ் கமிஷனர் குல்தீப் சிங் சாஹல் கூறுகையில், ‘நேற்றைய தேடுதல் வேட்டையின் போது அம்ரித் பால் சிங், அவரது ஆதரவாளர்கள் சிலருடன் தப்பிச் சென்றுவிட்டார். விரைவில் அம்ரித்பால் சிங் கைது செய்யப்படுவார். இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பஞ்சாபில் இன்று மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அமிர்தசரஸ், ஃபசில்கா, மோகா, பதிண்டா மற்றும் முக்த்சர் உள்ளிட்ட மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இமாச்சல், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுடனான பஞ்சாப் எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.தலைவனின் தந்தை பேட்டிஅம்ரித் பால் சிங்கின் தந்தை தர்செம் சிங் அளித்த பேட்டியில், ‘எனது வீட்டில் 3 முதல் 4 மணி நேரம் வரை போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த சட்டவிரோதமான ெபாருட்கள் எதுவும் எங்களது வீட்டில் கண்டுபிடிக்கப்படவில்லை. எனது மகன் இருப்பிடம் பற்றி எனக்கு தெரியாது. அவரை போலீசார் கைது செய்திருக்க வேண்டும்’ என்றார்.தப்பியோடும் வீடியோ வைரல் போலீசாரின் தேடுதல் வேட்டியில் இருந்து தப்பிப்பதற்காக அம்ரித் பால் சில் கார் ஒன்றில் அமர்ந்து கொண்டு ஓடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. காரில் இருந்த அவரது கூட்டாளி ஒருவர், ‘பாய் சாப்’ (அமிர்த பால்) பின்னால் போலீஸ்காரர்கள் இருந்ததாகக் கூறுகிறார். மற்றொரு ஆதரவாளர் வெளியிட்ட வீடியோவில், போலீசார் தன்னை துரத்துவதாகக் கூறினார். அம்ரித் பால் தனது ஆதரவாளர்களுடன் ஜலந்தரின் ஷாகோட் மல்சியன் சாலையை அடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது. சுமார் 60 போலீஸ் வாகனங்கள் அம்ரித் பால் தப்பிச் சென்ற பகுதியை சுற்றிவளைத்துள்ளன. இருந்தும் அவரை கைது செய்ததற்கான அதிகாரப்பூர்வ தகவலை பஞ்சாப் போலீசார் வெளியிடவில்லை.

மூலக்கதை