கிரேஸ் ஹாரிஸ் அதிரடி ஆர்சிபி அணிக்கு 136 ரன் இலக்கு

தினகரன்  தினகரன்
கிரேஸ் ஹாரிஸ் அதிரடி ஆர்சிபி அணிக்கு 136 ரன் இலக்கு

மும்பை: யுபி வாரியர்ஸ் அணியுடனான மகளிர் பிரிமியர் லீக் டி20 போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 136 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனா முதலில் பந்துவீச முடிவு செய்தார். வாரியர்ஸ் தொடக்க வீராங்கனைகள் தேவிகா வைத்யா 0, கேப்டன் அலிஸ்ஸா ஹீலி 1 ரன்னில் வெளியேற அந்த அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து வந்த தாஹ்லியா மெக்ராத் 2 ரன்னில் ஆட்டமிழக்க, வாரியர்ஸ் 2 ஓவரில் 5 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. கிரண் நவ்கிரே 22 ரன், சிம்ரன் ஷைக் 2 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, 8.1 ஓவரில் 31 ரன்னுக்கு 5 விக்கெட் என வாரியர்ஸ் மேலும் சரிவை சந்தித்தது. இந்த நிலையில் கிரேஸ் ஹாரிஸ் - தீப்தி ஷர்மா ஜோடி அதிரடியாக விளையாடி 6வது விக்கெட்டுக்கு 69 ரன் சேர்த்தது. தீப்தி 22 ரன், கிரேஸ் 46 ரன் (32 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷ்வேதா 6, அஞ்சலி 8, சோபி எக்லஸ்டோன் 12 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, யுபி வாரியர்ஸ் 19.3 ஓவரில் 135 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ராஜேஸ்வரி கெயக்வாட் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆர்சிபி பந்துவீச்சில் எல்லிஸ் பெர்ரி 4 ஓவரில் 16 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். டிவைன், சோபனா ஆஷா தலா 2, மெகான் ஷுட், ஷ்ரேயங்கா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 136 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது.

மூலக்கதை