இறைவனின் இருப்பிடமான கோவில்களில் கைவைத்தால் பொசுங்கி விடுவீர்கள்!

தினமலர்  தினமலர்
இறைவனின் இருப்பிடமான கோவில்களில் கைவைத்தால் பொசுங்கி விடுவீர்கள்!

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:


முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கோவில், புனிதமான இடம். அங்கு ஆன்மிக சிந்தனைகளும், பக்தியும் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள், மருத்துவ சிகிச்சைக்கான முதலுதவி மையம் அமைத்துள்ளது, அறநிலையத் துறை.

இறைவன் உறையும் இடத்தில், துாய்மை கெடுமாறு, முதலுதவி மையம் என்ற பெயரில் படுக்கை விரித்து, மருந்து வாசனை வீசச் செய்வது அராஜகம். சந்தனமும், ஜவ்வாதும், சாம்பிராணியும், ஊதுபத்தியும் மணக்க வேண்டிய இடத்தில், ரத்த வாடை வீசச் செய்வது விதண்டாவாதம். இப்படி ஒரு மையம் அமைக்க, வேறு எங்குமே இடம் இல்லையா... ஏன் சற்று தள்ளி சித்திரை வீதியில் இந்த மையத்தை அமைக்கலாமே? கோவில் உள்ளேயே தான் அமைக்க வேண்டுமா?

சாதாரணமாக வீடு என்றாலே, ஒவ்வொன்றுக்கும் தனி அறை வைத்திருக்கிறோம். சாப்பாட்டு அறையில் தான் சாப்பிடுகிறோம்; கழிப்பறையில் அல்ல. ஒரு சாதாரண மனிதனுக்கே இப்படி என்றால், உலகை ஆளும் இறைவனின் விஷயத்தில் ஏன் இந்த வக்கிர புத்தி? பல ஆண்டுகளுக்கு முன் கட்டி வைத்த அழகான கோவிலை அசிங்கப்படுத்துவது தர்மமில்லை.

அறநிலையத் துறையின் இந்தச் செயல், இறை நம்பிக்கை உள்ள பல ஹிந்துக்கள் மனதை புண்படுத்தியுள்ளது. கடந்த கும்பாபிஷேகத்தின் போது, அப்போதைய ஜெயலலிதா அரசு, அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கழிப்பறை கட்டியதே, பல ஆன்மிக பக்தர்களை மனம் நோகச் செய்தது. அந்த வரலாறு மீண்டும் திரும்ப வேண்டாம்.

முதல்வர் ஸ்டாலின் அவர்களே... தமிழகத்தில் எந்த ஊரிலும், நடமாட சரியான சாலை இல்லை; மழைநீர் வடிய எந்த முன்னேற்பாடும் இல்லை. அதை கவனிப்பதை விட்டு விட்டு, கோவில்களை இடிப்பதும், அறநிலையத் துறை என்ற பெயரில், கோவில்களில் அராஜகம் செய்வதும், நல்ல அரசுக்கு அழகல்ல.

உங்களது ஹிந்து காழ்ப்புணர்ச்சியையும், பார்ப்பன துவேஷத்தையும், போலி மதச் சார்பின்மையையும், மனிதர்களோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல், இறைவன் ஜோதிமயமானவன்; தீப்பிழம்பு. அவனின் இருப்பிடமான கோவில்களில் கைவைத்தால், பொசுங்கி விடுவீர்கள்; உஷார்!

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்: முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கோவில், புனிதமான

மூலக்கதை